Saturday, January 20, 2007

திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு: ஒரு தமிழ்க் கருவூலம்

திருக்குறள் சம்பந்தமாகப் பெரிய வேலை ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது; என்ன செய்யலாம்?” என்று கேட்டார். “மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் (உ.வே.சா) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார்கள். திருக்குறளுக்குக் கிடைக்கும் பழைய உரைகளையெல்லாம் தொகுத்து ஒவ்வொரு குறளின் பின்னும் அமைத்து, இலக்கண, இலக்கிய உரைகளில் குறளை மேற்கோளாகக் காட்டும் இடங்களை அங்கங்கே காட்டி, தொல்காப்பியம் முதல் இக்கால இலக்கியம் வரை குறளில் சொற்பொருள்களை எடுத்தாண்ட ஒப்புமைப் பகுதிகளையும் இணைத்து, வேண்டிய அடிக்குறிப்புகளும், அகராதிகளும், ஆராய்ச்சியுரையும் சேர்த்து வெளியிட வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணம். அந்த எண்ணம் அவர்கள் காலத்தில் நிறைவேறவில்லை. அதைச் செய்யலாம்” என்றேன்.

1950 வாக்கில் நடந்த இந்த உரையாடலில் கேள்வி தொடுத்தவர் அமரர் தி.சு.அவிநாசிலிங்கம். பதிலிறுத்தவர் உ.வே.சாவின் சிறந்த மாணாக்கரான அமரர் கி.வா.ஜகந்நாதன். இதன் உந்துதலால், இந்திய அரசின் ஆதரவுடன் 1950-ல் தொடங்கிய இந்த ஆராய்ச்சி கி.வா.ஜ அவர்களின் இடையறாத உழைப்பினால் 1963-ல் முடிவுற்றது. கி.வா.ஜ அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1963-ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி திரு. ராதகிருஷ்ணன் அவர்களால் “திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு” முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஒரு அற்புதக் கருவூலமான இந்த நூல், தமிழ் கூறும் நல்லுலகத்தின் நற்பேற்றினால் 2004-ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. 2006-ம் ஆண்டு இறுதியில் தற்செயலாக இதன் ஒரு பிரதியை எனது நற்பேற்றினால் நான் வாங்க நேர்ந்தது. அள்ளுதொறும் தமிழ்ச் சுவை நல்கும் இன்னூல் வாழ்நாள் முழுதும் படித்து இன்புறத் தக்கது என்று உணர்கிறேன்.

தமிழின் ஒப்புயர்வற்ற நூல்களில் தலையாயது தெய்வப் புலவர் இயற்றிய திருக்குறள். அந்தக் குறள் என்னும் ஆழ்கடலில் மூழ்கித் திளைக்க விரும்புவோர் அனைவருக்கும் பேருதவி புரியும் நூல் இது. 1133 பக்கங்கள் உள்ள பெரிய அளவு (அட்லாஸ் போல) புத்தகம்.






ஒவ்வொரு குறளுக்கும்,

• திருக்குறள் மூலம்

• பரிமேலழகர் உரை (முழுமையாக)

• உரை வேறுபாடு : மணக்குடவர், பரிதியார், பரிப் பெருமாள், காளிங்கர், கவிராஜபண்டிதர், எல்லிஸ் துரை இவர்களது உரைகள் பரிமேலழகர் உரையுடன் வேறுபடும் இடங்கள்

• ஒப்புமை: குறளின் சொல், பொருளை எடுத்தாளும் பிற இலக்கியங்கள். இதில் இறையனார் அகப்பொருள் உரை, தண்டியலங்காரம், நேமிநாதம், கல்லாடம் திருவாய்மொழி, தேவாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட ஏறக் குறைய 100 நூல்களிலிருந்து மேற்கோள்கள் தரப் படுகின்றன

• அடிக்குறிப்புக்கள்

பொதுப் பகுதிகளாக,

• திருவள்ளுவ மாலை, உரையுடன்

• திருக்குறள் சொல் அகராதி, பொருள் அகராதி, பொது அகராதி (200 பக்கங்கள்)

• நூலின் தொடக்கத்தில் குறளின் பல்வேறு வகைப் பட்ட தன்மைகளையும், சிறப்புக்களையும் விளக்கும் பதிப்பாசிரியர் கி.வா.ஜவின் மணியான, விரிவான முன்னுரை (104 பக்கங்கள்)

• பல அறிஞர்களின் அருமையான கட்டுரைகள்: திரு. அ.ச. ஞானசம்பந்தனின் “திருக்குறளில் கவிதைப் பண்பு”, இலங்கை பேராசிரியர் க.ச.அருள்நந்தியின் “வள்ளுவரின் உளநூல்”, டாக்டர் டி.எம்.பி. மகாதேவனின் “திருக்குறளின் தத்துவம்”, டாக்டர் மா.இராசமாணிக்கனாரின் “திருவள்ளுவர் காலம்”

• டாக்டர் அவ்வை நடராசன், டாக்டர் பொன். கோதண்டராமன், சுவாமி கமலாத்மானந்தர் ஆகியோரது அணிந்துரைகள்

விலை மதிப்பற்ற இந்தப் பதிப்பை மிகக் குறைந்த விலையான ரூ. 400க்கு வெளியிட்டிருப்பவர்கள் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரிய நாயக்கன் பாளையம், கோயம்புத்தூர் – 641020. ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிளைகளிலும், விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்பதாக அறிகிறேன். தேசிய, ஆன்மிக எழுச்சியூட்டும் சமூகப் பணிகளோடு இத்தகைய தமிழ்த் தொண்டும் புரியும் ஸ்ரீராமகிருஷ்ண மடம் பாராட்டுக்குரியது.

எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால்
பரந்த பாவால் என் பயன்? வள்ளுவனார்
சுரந்த பா வையத் துணை

- திருவள்ளுவ மாலை (மதுரைத் தமிழ் நாகனார் பாடியது)

15 comments:

Dr.Srishiv said...

ஐயா
மிக உபயோகமான தகவல், மிக்க நன்றி, இந்த தகவலை முத்தமிழ் கூகிள் குழுமத்திலும் எடுத்து இட்டிருக்கின்றேன், தொடர்க உங்கள் தமிழ் தொண்டு, இவண்,
ஸ்ரீஷிவ்...@சிவா..

ஜடாயு said...

மிகவும் நன்றி ஸ்ரீசிவ் ஷிவா அவர்களே.

Anonymous said...

அந்த புகைப்படம் மிக அழகு. வெள்ளை செம்பருத்தியும், கலையரசியும், ஸ்படிகம் கோர்த்த மாலையும்,

வெள்ளைத் தாமரை பூவினில் இருப்பாள்;
வீணை மீட்டும் ஒலியில் இருப்பாள்.

என்ற பாடலை முனுமுனுக்க வைத்தது.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

ஜடாயு said...

// அந்த புகைப்படம் மிக அழகு. வெள்ளை செம்பருத்தியும், கலையரசியும், ஸ்படிகம் கோர்த்த மாலையும், //

முரளிதரன்,

நூலை மட்டும் படம் பிடிப்பதைவிட இது பொலிவாக இருக்கும் என்பதால் இப்படி எடுத்தேன். பார்த்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

Anonymous said...

மிகவும் உபயோகமான தகவல்.

திருக்குறள் ஒரு பொக்கிஷம். அதன் பெருமைகளைப் பேசும் உங்கள் பதிவுக்குப் பாராட்டுக்கள். நன்றி.

Anonymous said...

நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களைப் பார்த்தால் எத்தகைய மலை போன்ற பணி இது என்று ஊகிக்க முடிகிறது! இதைச் செய்து முடிக்க எத்துணை தமிழ்ப் புலமை வேண்டும்! எத்துணை உழைப்பு வேண்டும்!

உ.வே.சாவின் தமிழ்க் கனவை நனவாக்கிய அவர் மாணவர் கி.வா.ஜகன்னாதனை நினைத்துப் பெருமிதம் ஏற்படுகிறது.. இத்தகைய மாபெரும் தமிழ்த் தொண்டினைப் பற்றி எழுதியதற்கு நன்றி.

அன்புடன்,
இரா. முருகவேல்

Anonymous said...

Hi,

THis is very useful information for all Kural enthusiasts. Thank you very much for writing abt this in your blog.

Affectionately,
Ramachandran

Anonymous said...

ஜடாயு,
உபயோகமான தகவல்களுக்கு மிக்க நன்றி.... உடனடியாக வாங்கிவிட வேண்டும், பலமுறை படிக்கவேண்டும் என்ற உந்துதல் தந்தமைக்கு.

தமிழ் சமூகத்திற்றகு மட்டுமல்லாது, உலக சமூகத்தினற்கும் இது ஒரு பொக்கிஷம். இதற்காக தமது வாழ்நாளின் பெரும்பகுதியை செலவுசெய்த கி.வா.ஜா அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். வெள்ளை செம்பருத்தியும், கலைமகளும், ஸ்படிகமாலையையும் கொண்டு புத்தகத்தை பளிச்சென்று அறிமுகப்படுதிய விதம் நன்று.
R.பாலா.

வெற்றி said...

ஜடாயு,
அருமையான பதிவு.
தகவல்களுக்கு மிக்க நன்றி.

ஜடாயு said...

பாலா,

// தமது வாழ்நாளின் பெரும்பகுதியை செலவுசெய்த கி.வா.ஜா அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். //

கண்டிப்பாக.

// வெள்ளை செம்பருத்தியும், கலைமகளும், ஸ்படிகமாலையையும் கொண்டு புத்தகத்தை பளிச்சென்று அறிமுகப்படுதிய விதம் நன்று. //

மிக்க நன்றி.

வெற்றி, வருகைக்குக் கருத்துக்கும் நன்றி.

ஜடாயு said...

இந்தப் பதிவை பூங்கா வலை இதழில் இணைத்த பூங்கா ஆசிரியர் குழுவுக்கு நன்றி.
http://poongaa.com/content/view/1069/1/

திண்ணை இதழிலும் இது வெளிவந்துள்ளது.

anyindian.com இணைய புத்தகக் கடையிலும் இந்த நூல் கிடைப்பதாக அறிகிறேன்.

Unknown said...

நேற்று தான் இப்பதிவை கோவை மிஷனுக்கெழுதி வாங்கினேன். உங்கள் உதவிக்கு நன்றி. நீங்கள் எனக்குத் தெரியப்படுத்தாவிட்டால் இந்த அரிய பொக்கிஷத்தை கண்ணால் கண்டிருக்கவும் மாட்டேன்.

நீங்கள் சொல்லியபடி, ஆழ்ந்து அனுபவித்து தமிழின்பம் பெற பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும்.
மீண்டும் நன்றி,

சே. ராஜகோபாலன்

சுழியம் said...

திருவள்ளுவ மாலை ஒரு போலி நூல் என்று தமிழ் இலக்கிய வரலாறு குறித்த ஆய்வு தெரிவிப்பதாகக் கேள்வி.

C.Rajendiran, Founder ,www.voiceofvalluvar.org said...

நல்ல மதிப்புரை.. தகவல்கள், உரிய மேற்கோளுடன் நான் இதை www.voiceofvalluvar.org இல் பயன்படுத்திக் கொள்கிறேன்.
நன்றியுடன் சி. இராஜேந்திரன் voiceofvalluvar1330@gmail.com

Anonymous said...

அருமையான பொக்கிசம்