Friday, April 20, 2007

நெல்லிக்காய் மூட்டை: இந்து ஒற்றுமை பற்றி பாரதியார்

நான் சிறு குழந்தையாக இருக்கும்போது ஹிந்துக்களைப் போல் ஒற்றுமைக் குறைவான கூட்டத்தார் வேறெந்த தேசத்திலும் இல்லையென்றும், ஹிந்துக்கள் நெல்லிக்காய் மூட்டைக்குச் சமானமென்றும் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். பிறகு உலகத்திலுள்ள வேறு பல தேசங்களின் பூர்வ சரித்திரத்தையும், தற்கால இயல்பையும் பல விதங்களில் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் மேற்படி வார்த்தை தவறு என்று தெரிந்தது. கிழக்கே, மேற்கே, வடக்கே, தெற்கே உலகத்திலுள்ள எந்த ராஜ்ஜியத்தைப் பார்த்தாலும் அங்கு பணமும், அதிகாரமும் இருக்கும் வரை மனிதர் பரஸ்பர விரோதங்களையும், பொறாமைகளையும் உள்ளே அடக்கி வைத்துக் கொண்டு ஒரு விதமான வெளியொற்றுமை பாராட்டித் திரிகிறார்கள். இருந்தாலும் நாலடியாரில் சொல்லியபடி

"அட்டுற யார்மாட்டும் நில்லாது, செல்வம் சகடக்கால் போல வரும்".

லஷ்மிதேவி எந்த இடத்திலும் ஒரே நிலையாக நிற்பது வழக்கமில்லை. செல்வமும், அதனாலுண்டான பெருமையும், ஒரு கூட்டத்தாருக்கிடையே குறைவுபடும்போது உட்பொறாமையும், மாச்சரியமும் வெளிப்பட்டு தலைதூக்கி ஆடுகின்றன. உலக சரித்திரத்தை அறிவுடன் படித்த புத்திமான்கள் இதனை நன்றாக அறிவார்கள்.

ஆனால், இவ்விஷயத்திலே கூட, மற்ற தேசத்தாரைக் காட்டிலும், ஹிந்துக்கள் மேலென்று எனது விசாரணையில் தென்படுகிறது. ஏனென்றால், ஹிந்துக்களிடம் தெய்வபக்தி என்ற சிறந்த குணம், மற்றெல்லா தேசத்தாரைக் காட்டிலும் அதிகமென்பதை மேற்குப் பக்கத்துப் பண்டிதரிலே கூட பக்ஷபாதமற்ற பல யோக்கியர் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். தெய்வபக்தியினால் ஜீவதையை உண்டாகிறது.

"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
யல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே"

என்று தாயுமானவர் தமது தெய்வ பக்தியின் உண்மையை விளக்கினார்.

சென்னை, கார்த்திகை மாதம் புயற்காற்றடித்ததைப் பற்றி தென்னாற்காடு ஜில்லாவைச் சோதனை செய்த சர்க்கார் அதிகாரியான ஒரு ஆங்கிலேயர் தம்முடைய அறிக்கையில் ஹிந்து ஜனங்களுடைய விசேஷ ஜீவதையை, அதிதி சத்காரம் என்ற குணங்களை மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். காற்றடித்த இரவில் சில வைதிக பிராமணர் தமது வீட்டிற்குள் பறையர் வந்திருக்க இடங்கொடுத்ததாகப் பத்திரிகைகள் கூறின. ஏழைகளாக நம்மைச் சூழ்ந்திருப்போர் சிவனுடைய கணங்கள், நாராயணனுடைய மக்கள், முருகனுக்குத் தோழர், சக்தியின் அவதார ரூபம். பரமசிவன் சண்டாள ரூபத்துடன் சங்கராசாரியாருக்கு சமத்துவ ஞானத்தை ஊட்டினார். ஸ்ரீரங்கத்தில் எம்பெருமான் கடைக் குலத்தவராகிய திருப்பாணாழ்வாரை பரிசாக வேதியன் சுமந்துகொண்டு வந்து தனது கர்வ நோயைத் தீர்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டருளினார்.
சந்திரனுக்குள் ஒரு களங்கம் இருப்பது போல் இப்போது நம்முடைய கூட்டத்தில் ஒரு களங்கம் இருக்கிறது. ஆனால், பூத சந்திரனில் உள்ள களங்கத்தை அது தானே மாற்றிக் கொள்ளாது. ஞான சூர்யராகிய ஹிந்துக்கள் தமக்குள்ள குறையை விரைவாக நீக்கி வருகிறார்கள். அந்த களங்கமாவது நமது ஜாதிக் கட்டிலுள்ள சில வழக்கங்கள். மறுபடி தெய்வத்தை நம்பு எல்லாரும் இன்புற வேண்டி, குணகர்மங்களால் வர்ண நிச்சயம் செய்து கொண்டு, பூமண்டலத்திற்கு ஞானோபதேசம் செய்யும் பொருட்டாக பாரத தேவி தனது பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். காலம் ஹிந்துக்களின் சார்பில் வேலை செய்கிறது. தேவர்களெல்லாரும் ஹிந்துக்களைக் கைதூக்கிவிடப் புறப்பட்டிருக்கிறார்கள்.

பரமாத்மா ஒன்று, அவனுக்கு ரிஷிகள் பல பெயர்கள் சொல்லிப் போற்றுகிறார்களென்று வேதம் சொல்லுகிறது.

"பேரனந்தம் பேசி, மறையனந்தம் சொலும்
பெரிய மௌனத்தின் வைப்பு"

என்று தாயுமானவர் சுட்டினார். ராமகிருஷ்ணர் இதையே சொன்னார். இந்த உண்மை ஹிந்துக்களுடைய புத்தியில் வேரூன்றி விட்டது. எனவே, கலி நீங்கி விட்டது.

நெல்லிக்காய் மூட்டையைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. நெல்லிக்காய் கொடுத்தால் எல்லாரும் வாங்கித் தின்கிறார்கள். ஆனால், ஹிந்துக்கள் நெல்லிக்காய் மூட்டை போலென்று சொல்வோனைக் கண்டால், எல்லோரும் கைகட்டி சிரிப்பார்கள். இந்து தேசம் ஒரு தேவலோகத்துப் பலாப் பழத்தைப் போலாகி விட்டது. இனியென்றும் அழியாத பலாப் பழம். ஒவ்வொரு ஆரியனும் அதில் முளைத்தவன். நாம் எல்லோரும் சேர்ந்து அந்தப் பலாப்பழத்தின் மேல்தோல். உள்ளே ஞானச் சுளை.

நமக்கு அழிவில்லை, நமக்குள்ளே பிரிவில்லை. நாமொன்று. நாம் எப்போதும் தெய்வத்தையே நம்புகிறோம். தெய்வத்தை நம்பி நாம் அறத்தைச் செய்தால், நம்முடைய யோகக்ஷேமங்களை தெய்வம் ஆதரிக்குமென்று பகவத்கீதை சொல்லுகிறது.

(நன்றி: பாரதியார் கட்டுரைகள்)

5 comments:

நெல்லிக் கொட்டை said...

சரியாத்தான் சொல்லி இருக்கார், பல சமயங்களில் பாரதி உண்மையத்தான் பேசி இருக்கார்.

சூத்திரனுக்கு ஒரு நீதி தெண்டச்சோற்று பார்பனனுக்கு ஒரு நீதி - மேலே உள்ள நெல்லிக்காய் மூட்டை இதற்கு பொருத்தமாக இருக்கும் போல் தெரிகிறது ஜடாயு சார்.

நம் பல்லில் உள்ள கறைகள் கூட காவி நிறத்தில் இருப்பதால் காவிக்கொடியின் மகிமை எவ்வளவு இயற்கை ஆனது என்று நினைத்து மெய்சிலிர்த்துப் போனேன். தொடர்ந்து எழுதுங்கள். திராவிட திம்மிகள் ஒழிக.

ஜடாயு said...

// தொடர்ந்து எழுதுங்கள். திராவிட திம்மிகள் ஒழிக. //

நன்றி நெல்லிக் கொட்டை அவர்களே.

கங்காதரன் said...

// பூமண்டலத்திற்கு ஞானோபதேசம் செய்யும் பொருட்டாக பாரத தேவி தனது பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். காலம் ஹிந்துக்களின் சார்பில் வேலை செய்கிறது.//
// இந்து தேசம் ஒரு தேவலோகத்துப் பலாப் பழத்தைப் போலாகி விட்டது. இனியென்றும் அழியாத பலாப் பழம். //

பாரதியின் அழகான, வீரியமிக்க வரிகள்.

இந்தக் கட்டுரையைப் பதிவில் இட்டதற்கு மிக்க நன்றி.

Anonymous said...

// கிழக்கே, மேற்கே, வடக்கே, தெற்கே உலகத்திலுள்ள எந்த ராஜ்ஜியத்தைப் பார்த்தாலும் அங்கு பணமும், அதிகாரமும் இருக்கும் வரை மனிதர் பரஸ்பர விரோதங்களையும், பொறாமைகளையும் உள்ளே அடக்கி வைத்துக் கொண்டு ஒரு விதமான வெளியொற்றுமை பாராட்டித் திரிகிறார்கள்.//

What prophetic words by Bharathi! It is true even today.

Very nice article. Thanks for publishing in blog, Jadayu.

Please bring more of such Bharathi's works in your blog.

THanks,

-Ramachandran

நேச குமார் said...

// கிழக்கே, மேற்கே, வடக்கே, தெற்கே உலகத்திலுள்ள எந்த ராஜ்ஜியத்தைப் பார்த்தாலும் அங்கு பணமும், அதிகாரமும் இருக்கும் வரை மனிதர் பரஸ்பர விரோதங்களையும், பொறாமைகளையும் உள்ளே அடக்கி வைத்துக் கொண்டு ஒரு விதமான வெளியொற்றுமை பாராட்டித் திரிகிறார்கள்.//


இஸ்லாம் என் நினைவிற்கு வருகிறது. நல்ல கட்டுரை. நன்றி ஜடாயு.