Sunday, April 29, 2007

மொழிகள் சங்கமிக்கும் இந்து ஆன்மிகம்

பாரதத்தின் ஆன்மிக, தேசிய ஒருமைப்பாட்டு மொழியாக சம்ஸ்கிருதம் விளங்கி வருவது குறித்து மிக அழகாக அரவிந்தன் தன் பதிவில் எழுதியிருக்கிறார். பாரதத்தின் பல மாநிலங்களுக்குச் சென்று பலதரப்பட்ட மக்களோடு பழகிய என் அனுபவத்தில் இந்த கூற்று மிக உண்மையானது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். ஹிந்தி கற்றுக் கொள்ள ஆரம்பித்து அதன் மூலம் நான் கற்று அறிந்த சம்ஸ்கிருதச் சொற்கள் தான் ஒவ்வொரு புதிய இந்திய மொழியை நான் சந்தித்த சமயத்திலும் அதனோடு ஏற்கனவே எனக்கு இருந்த பந்தத்தின் இழையை, இருப்பை உணர வைத்தது. அனேகமாக இந்தியாவின் பல மொழிச் சொற்களையும் (கலைச் சொற்கள் உட்பட) சிறுசிறு முயற்சிகள் மூலம் நான் உள்வாங்கிக் கொள்ள முடிவதற்கு இதுவே காரணம்.

இந்து இயக்கங்களுக்கு அறிவுரை கூறுகிறேன் என்ற பேரில் மா.சிவகுமார் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார் -

// ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதியின் மொழியிலேயே வழிபாடுகள் நடத்தப் போராட வேண்டும் //

அவ்வப்பொழுது அடிக்கடி தமிழ் இணையத்தில் சிலரும் இதுபோன்ற கோரிக்கைகளை வைத்தவன்ணம் உள்ளார்கள்.

இந்து ஆன்மிக கலாசார மரபில், காலங்காலமாக இழையோடிக் கொண்டிருக்கும் மொழிகள் இணைந்த, மொழிகளையும் கடந்த அற்புதமான ஒருமையுணர்வைக் குட்டிச் சுவராக்க எண்ணும் குருட்டுச் சிந்தனை இது.

இந்தியாவின் எந்த மூலைக்குப் போனாலும் ஓம் நமசிவாய, ராமநாமம், கிருஷ்ணநாமம் மற்றும் காயத்ரி போன்ற தெய்வீக மந்திரங்கள் தான் வழிபாடுகளில் இருக்கும்.. இவை வெறும் சொற்களாலான மொழி அல்ல, ஆன்மிக மொழி. இதை சில விதண்டாவாதிகள், மொழிவெறியர்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் உண்மையான பக்தர்கள், ஆன்மிகவாதிகள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தமிழகத்தில் திராவிட பொய்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட சிலர் தவிர பாரதத்தின் எல்லா பகுதிகளிலும் எல்லா மக்களும் சம்ஸ்கிருதத்தை வேறுமொழியாக அல்ல, தங்கள் மொழிகளோடு தொப்புள்கொடி உறவு உள்ள ஒரு வேர்மொழியாகவே கருதுகிறார்கள். என் அனுபவத்தில் நான் சென்ற பல இடங்களிலும் மக்கள் சம்ஸ்கிருத சுலோகங்கள், மற்றும் தங்கள் மொழிப் பாடல்கள், மற்றும் சில சமயங்களில் மற்ற மொழிப்பாடல்களையும் கூடப் பாடி அற்புத தேசிய சங்கமமாக வழிபாடு செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

"இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்"

என்று மாணிக்கவாசகர் அழகாகக் கூறுவார்.

ஆந்திராவின் பெருமாள் கோவில்களில் தெலுங்கு லிபியில் உள்ள புத்தகத்தை வைத்து திருப்பாவை தமிழ் மூலப் பாடல்களை ப் படிப்பவர்களைப் பார்க்கலாம். சென்னையிலும், மதுரையிலும், கோவையிலும் நடக்கும் எத்தனையோ பஜனனைகளில் மீராவின் நெஞ்சைத் தொடும் ஹிந்திப் பாடல்களும், துகாராமின் மராட்டி அபங்கங்களும் கேட்கலாம்! மகாராஷ்டிர சிவன் கோயில்களில் சென்று நான் திருஞானசம்பந்தரின் நமச்சிவாயப் பதிகம் பாடியிருக்கிறேன்.. மொழி புரியாவிட்டாலும் "நமச்சிவாயவே" என்ற மந்திரச் சொல் திகழும் அந்தப் பாடல்களை உள்ளூர் மக்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்திருக்கின்றார்கள்.




"மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திரு மூர்த்தி.. " என்று அபிராமி பட்டர் அன்னையைப் பாடினார். அந்தப் பரம்பொருளின் வாக்காகவே மொழிகள் எல்லாம் உள்ளன.

ஆதிமுதல் சிவநடனத்தின் போது ஒலித்த உடுக்கையின் நாதத்தில் இருந்தே தங்கள் மொழியின் முதல் ஒலிகள் தோன்றியதாக சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளின் மரபிலும் புராணம் உள்ளது. பாரத மொழிகள் எல்லாமே தெய்வத்தன்மை உடையவை என்றே இந்து ஆன்மிகம் கருதுகிறது. "பாஷா ரூபா" (மொழிகள் வடிவானவள்) என்றே ஒரு அழகிய திருநாமம் லலிதா சகஸ்ரநாமத்தில் வருகிறது. நமது தேசியப் பாடல் வந்தே மாதரம் "ஸுமதுர பாஷிணீம்" என்று பாரத அன்னையைப் பாடுகிறது. "இனிமையான மொழிகளை உடையவளே" என்பது இதன் உண்மைப் பொருள்.

கம்பராமாயணம் பாயிரப் பாடல் இன்னும் ஒருபடி மேலே சென்று உலகில் எந்த இடத்தின் மொழியானாலும் அதில் ராமகாதையைக் கேட்பவர்கள் அமரர் ஆவார்கள் என்று கூறுகிறது -

வட கலை, தென் கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே

(வடகலை - சம்ஸ்கிருதம், தென்கலை - தமிழ், வடுகு - தெலுங்கு, பாடை - பாஷை, அடைவுடன் - பக்தியுடன்)

கடந்த 2-3 நூற்றாண்டுகளின் ஆங்கிலம் பெருமளவில் உலகெங்கும் இந்து ஆன்மிகக் கருத்துக்களைக் கொண்டுசெல்லும் ஊடகமாக இருந்து வந்துள்ளது. இந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சுவாமி விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர் இவர்களது உபதேசங்கள் ஆங்கிலத்திலேயே முதன்முதலில் வந்தன, பின்னர் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டன.

இந்து மதம் உலக மதம். "வட்டார மொழியில் மட்டுமே வழிபாடு செய்யவேண்டும்" போன்ற கோரிக்கைகள் இந்து மதத்தின் இந்த உலகத் தன்மையைச் சிதைத்து வேண்டுமென்றே அதன் கூறுகளைத் தனித் தனியாகப் பிய்த்து சிறுகுழுக் கலாசாரமாக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான். (இது தொடர்பான பொங்கல் பற்றிய பழைய பதிவு இங்கே). மொழிப்பற்று என்ற பெயரில் இங்கே அது உருக்கொள்கிறது.

தமிழ் வழிபாடு தழைக்கட்டும், இந்து ஆன்மிகம் செழிக்கட்டும்! தேவாரமும், திவ்வியப் பிரபந்தமும் தெய்வத் தமிழ்ப் பாடல்களும், வேத மந்திரங்களின், சம்ஸ்கிருத சுலோகங்களின் ஒத்திசையோடு சேர்ந்து ஒலிக்கட்டும்! ஆதி முனிவர்களின் மொழி முதல் ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் மொழிகள் வரை, உலக மொழிகள் அனைத்திலும் இந்து ஆன்மிகக் கருத்துக்கள் வெள்ளமெனப் பாயட்டும்!

No comments: