Friday, February 22, 2008

நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்

பிப்ரவரி 7, 2008 திண்ணை இதழில் ஜெயமோகன் எழுதியிருக்கும் “நீதியும் நாட்டார் விவேகமும் ....“ என்ற கட்டுரை குறித்து சில விமரிசனங்கள்.

// ஜெ.மோ: இவற்றில் உச்சம் திருவள்ளுவர் என்றும் சமண மரபில் ஆச்சாரிய குந்தகுந்தர் என்றும் குறிப்பிடப்படும் சமண முனிவரால் எழுதப்பட்ட 'திருக்குறள்' //

திருவள்ளுவரின் சமயப் பார்வை பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் சைவம், வைணவம் இவற்றை உள்ளடக்கிய (இன்று இந்துமதம் என்றழைக்கப் படும்) வேத சமயத்தினர், சமணர் அல்லது பௌத்தர் ஆகிய மூன்று தரப்பிற்கும் பல்வேறு வலுவான ஆதாரங்கள் வைக்கப் படுகின்றன. இந்நிலையில் முடிந்த முடிபாக இவ்வாறு ஜெயமோகன் எழுதியிருப்பது சரியானதன்று. சமண மறுமலர்ச்சி பற்றி முழங்கும் தருண் சாகர் போன்ற ஜைன ஆசாரியர்கள் தான் தங்கள் பிரசார மேடைகளில் எல்லாம் “குந்தகுந்தர் தான் திருவள்ளுவர்” என்று பேசி வருகிறார்கள். சமீப காலங்களில் இந்த rhetoric அதிகமாகியுள்ளது என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் ஆய்வு நோக்குள்ள ஒரு எழுத்தாளரின் இத்தகைய நிலைப்பாடு வியப்பூட்டுகிறது.



நீதி என்ற கருத்தியல் அடிப்படையை மட்டுமே கொண்டு திருவள்ளுவரின் “சமணத்” தன்மையை ஜெயமோகன் முன்னிறுத்துவதாகத் தெரிகிறது. ஆனால் திருவள்ளுவர் கண்டிப்பாக ஏன் சமணராகவும் (பௌத்தராகவும்) இருந்திருக்கவே முடியாது, அவர் இந்து/வேத சமயத்தினராக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் கருத்தியல் மட்டுல்ல, குறள் நேரிடையாகக் குறிப்பிடும் பருப்பொருள் உண்மைகள், உவமானங்கள், கூறுபொருள்கள் இவை அனைத்தின் மூலமும் உறுதி செய்யப் படுகின்றன.

இது குறித்து யுகமாயினி என்ற இலக்கிய சிற்றிதழில் ஜாவா குமார் என்பவர் எழுதிய கட்டுரையை இதன் இறுதியில் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன். இந்தக் கட்டுரை இத்தகைய முக்கிய ஆதாரங்களை சுருக்கமாகத் தொட்டுக் காண்பிக்கின்றது. .

// ஜெ.மோ: சமணர்களால் உருவாக்கப்பட்ட நீதி அதுவரை இந்திய சமூகத்தில் இல்லாதிருந்த பல முக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஒன்று அதற்கு மானுடமளாவிய ஒரு நோக்கு இருந்தது. அடிப்படை விழுமியங்களையாவது அனைத்துமானுடருக்கும் சமமாக வைக்க அதனால் இயன்றது. இரண்டு, வன்முறை சாராமல் மனிதனின் கருணையையும் அகச்சான்றையும் நம்பியே பேசும் நீதியை அவை முன்வைத்தன. //

நீதி என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இட்டுச் செல்லுவது, வழிநடத்துவது என்று பொருள். அதனால் தான் நீதி நூல்கள் தத்துவ விவாதங்களாகவோ அல்லது தேடல்களாகவோ அல்லாமல் வெளிப்படையான அறவுரைகளாவும், இதைச் செய், இதைச் செய்யாதே என்று கட்டளையிடும் உபதேசங்களாகவும் உள்ளன. ஆனால், இந்த நீதியின் ஊற்றுக் கண்ணாக தர்மம் என்கிற கோட்பாடு (principle) உள்ளது. நீதிகளை (morals, ethics) உருவாக்குபவர்கள் அவற்றின் உண்மைத் தன்மையை தர்மம் என்ற உரைகல்லில் உரைத்தே உறுதி செய்ய வேண்டும். தர்மம் என்கிற மாறாத உண்மையின் கனி தான் நீதி என்பது.

இந்த தர்மம், மானுட அறம் என்கிற கோட்பாடு வேத ரிஷிகளாலேயே முதன்முதலில் எடுத்துரைக்கப் பட்டது. ரிக்வேத சம்ஹிதைகளிலேயே உலகின் மாறாத நியதி தர்மம் என்ற கருத்து உள்ளது. உபநிஷதங்கள் இதனை தங்கள் தத்துவப் பின்புலத்தில் வளர்த்தெடுக்கின்றன. உதாரணமாக, பிரகதாரண்ய உபநிஷத்தில் தர்மம் பற்றிய மிக விரிவான உரையாடல்கள் உள்ளன. பின்னர் இதிகாசங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள், கதைகள் மூலம் அறம் பற்றிய பல பரிமாணங்களை வெளிக் கொணர்கின்றன.

ந வை ராஜ்யம் ந ச ராஜா ஆஸீத், ந ச தண்டோ ந தாண்டிக:
தர்மேணைவ ப்ரஜா: ஸர்வே ரக்ஷந்தி ஸ்ம பரஸ்பரம்


“அரசும் இல்லை அரசனும் இல்லை; தண்டனைகளும் இல்லை, தண்டிப்பவனும் இல்லை.
மனிதர்கள் அனைவரும் தர்மத்தினாலேயே தங்களை பரஸ்பரம் பாதுகாத்துக் கொண்டனர்”

என்கிற மகாபாரத சுலோகம் குறள் கூறும் “அறம்” என்ற கருத்துடன் முழுதும் ஒன்றுபடுகிறது. “என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்” என்று வள்ளுவர் கூறுவது நீதி என்ற கருத்தாக்கத்திற்கும் அப்பாற்பட்ட உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய இந்த தர்மம் பற்றியே, இதனையே, “ஜகத ஸ்திதி காரணம்” (உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய தர்மம்) என்று சங்கரர் தன் உரை ஒன்றில் கூறுகிறார்.



தர்மோ ரக்ஷதி ரக்ஷித: (தர்மத்தைக் காப்பவரை தர்மம் காக்கும்) - விசுவ ஹிந்து பரிஷத் சின்னம்

இந்து மதம், பௌத்தம், சமணம் ஆகிய மூன்று மதங்களும் தர்மம் என்கிற இந்த அடிப்படைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவை தான். அதனோடு கூட, ஒவ்வொரு மதத்தின் இறையியலிலும் இந்த சொல்லுக்கான சிறப்புப் பொருள்களும், விளக்கங்களும் அளிக்கப் படுகின்றன. அதனால் தான் இப்போது தலாய் லாமா உள்ளிட்ட பல சமயத் தலைவர்கள் இந்த மூன்று மதங்களையும் பொதுவாகக் குறிக்க கிழக்கத்திய மதங்கள் (eastern religions) என்பதற்குப் பதிலாக தர்ம மதங்கள் (Dharmic religions) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

எனவே சமணம் தான் மானுடம் அளாவிய அறக் கோட்பாட்டையே “உருவாக்கியது” என்பது முற்றிலும் பிழைபட்ட புரிதல்.

// பேராரசுக்குரிய நீதி எப்போதும் தண்டனைகளால் அடிக்குறிப்பிடப்பட்டது. வாளால் பரப்பபடுவது, ரத்தத்தால் நிறுவப்படுவது.
வணிகநீதி இந்திய நிலப்பகுதியில் இரு பெரும் மதங்களின் குரலாக ஒலித்தது. பௌத்தம் சமணம் இரண்டுமே அடிப்படையில் வைசியர்களின் மதங்கள். பின்னர் தொழில்செய்யும் சூத்திரர்களின் மதங்களாக அவை வளர்ந்தன. பௌத்தமும் சமணமும் வணிகத்திற்கு இன்றியமையாத அடிப்படை நெறிகளை இந்திய நிலப்பகுதி முழுக்கக் கொண்டு சென்றன. //

“தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்” (அடக்குபவைகளில் தண்டனையாகவும், வெற்றியை நாடுபவர்களிடத்தில் நீதியாகவும் நான் இருக்கிறேன்) என்று கீதையில் (10.38) கிருஷ்ணன் கூறுகிறார்.

வணிக நெறி என்பது அரசிற்குக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அரசனால் நிர்வகிக்கப் பட்ட ஒன்றாகவே இருந்ததே அன்றி அதற்கு எதிரான, மாற்றான ஒன்றாக இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தங்கள் பயணங்களில் கொள்ளைக் காரர்களாலும், வழிப்பறிகளாலும் தாக்கப் பட்ட இந்திய வணிகர்கள் அவர்களை எதிர்த்துப் போராடவுமில்லை, கருணையினால் மன்னித்து விட்டுவிடவும் இல்லை. மாறாக தங்களைக் காக்க வேண்டி மன்னனிடமே சென்று முறையிட்டனர். சம்ஸ்கிருத நாடகங்களிலும், சங்க இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் பல உள்ளன. சட்டமும், தண்டனைகளும் நீதியின் ஒரு முக்கியமான அங்கம் என்பதை அவர்கள் தெளிவாகவே உணர்ந்திருந்தனர்.

திருக்குறளில் வணிகம் என்று ஒரே ஒரு அதிகாரம் உள்ளது, ஆனால் மன்னனைப் பற்றியும் அரசாட்சி பற்றியும் பற்பல அதிகாரங்கள் உள்ளன. “ஒறுத்தல்” (தண்டனை) என்கிற சொல் பல இடங்களில் புழங்குகிறது - “கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்” என்பதில் உள்ளது போல.

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப் படும்.

வானோக்கி வாழும் பயிர் என்ப மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.

அந்தணர் நூற்கும், *அறத்திற்கும்* ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

இப்படி மன்னனே சமுதாய நலனுக்கு அச்சாணி என்று அறுதியிடும் குறட்பாக்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வகையில் குறள் மகாபாரதம் கூறும் அதே நீதிக் கருத்துக்களை, விவாதப் பின்புலங்கள் தவிர்த்து அவற்றின் சுருக்கமான வடிவில் வைக்கிறது என்பதே சரியான முடிவாக இருக்கும். அதன் பார்வை எந்த சமண நூலையும் விட மகாபாரதத்திற்குத் தான் மிக நெருக்கத்தில் உள்ளது.

“சொல்லக் கொடாத சுயோதனன் பின் ஏன்
கொல்லக் கொடுத்தான் குமரேசா - மெல்லவே
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்லப் பயன்படும் கீழ்”


என்பது குமரேச வெண்பா என்னும் நூலில் உள்ள ஒரு பாடல். முதல் இரண்டு அடிகளில் ஒரு உதாரணம், சம்பவம் அல்லது கதையையும் (இவை பெரும்பாலும் இதிகாச, புரானங்களில் இருந்தே இருக்கும்) அடுத்த இரண்டு அடிகளில் குறட்பாவின் மூல வடிவையும் கொண்டு அமைந்த நூல் இது. இதே போன்று சிவசிவ வெண்பா என்றும் ஒரு நூல் இருக்கிறது. குறட்கருத்துக்களுக்கு வாழும் உதாரணங்களாக இந்த நூலாசிரியர்கள் காட்டுவது இந்து புராணங்களையும், கதையாடல்களையும் தான், சமணத்தில் பல குறட்பாக்களுக்கு உதாரணமே கிடைத்திருக்காது.

மேலும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று வாழ்க்கைப் பயன்களையும் (த்ரிவர்கம்) ஒருங்கே பேசும் குறள் எப்படி வாழ்க்கையை நிராகரிக்கும் சமண அறவியலின், பொருளை மையமாகக் கொண்ட வணிக நீதியின் குரலாக மட்டும் இருக்க முடியும்? இந்தியப் பண்பாட்டின் முக்கிய அம்சமான இந்த பரந்து பட்ட அறக்கோட்பாட்டையும், அதனை எடுத்தோதும் திருக்குறளையும் இப்படிக் குறுக்குவதே செயற்கையானதும், ஒற்றைப் படை சிந்தனைப் போக்கும் ஆகும்.

பிற்சேர்க்கை:
யுகமாயினி : டிசம்பர் 2007 இதழ் (பக்கங்கள் 20-24): ஜாவா குமார் எழுதியுள்ள கட்டுரை.

அன்புள்ள யுகமாயினி ஆசிரியருக்கு,
தங்களின் சமீபத்திய இதழில் திரு.இந்திராபார்த்தசாரதியின் கட்டுரை ஒன்றில் கீழ்க்காணும் இந்தப்பகுதி என் கவனத்தை ஈர்க்க இதை எழுதுகிறேன்.
" இன்னொரு வகையான வன்முறையும் உண்டு. புத்த ஜாதகத்தில் வழங்கிய ராமாயணக்கதை, ஹிந்து மதத்துப் புனித காவியம் ஆவதுபோல, சமணத் துறவியாக வள்ளுவருக்கு, ஜடா முடியை அணிவித்து, திருமேனி முழுவதும் திருநீற்றைப் பூசியிருப்பது போல், தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சீவக சிந்தாமணியும் பல நூல்களும் தப்பித்திருப்பது, அவை செய்த அதிர்ஷம் என்றுதான் சொல்லவேண்டும். இன்னொரு சமணராகிய தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை வைதிக மதத்துச் சட்ட திட்டங்களுக்குள் கொண்டுவர உரையாசிரியர்கள் எவ்வாறு முயல்கிறார்கள் என்பது கருத்து வன்முறையின் வேறொரு முகம். "

மேலே திரு.இபா சொல்ல முனைவது 'வைதிகமதத்தினர் (அது என்ன மதம் என்று தெரியவில்லை) சமணரான திருவள்ளுவரை சைவராக வலிந்தேற்றித் திருநீற்றைப் பூசி விட்டனர்' என்று கொள்கிறேன்.

திருநீறுதான் திரு.இபாவின் பிரச்னை என்றால், வைணவமரபில் வந்த பரிமேலழகரே (இவரை காஞ்சி உலகளந்தபெருமாள் கோயில் பட்டரென்பர்) கடவுள்வாழ்த்துப் பகுதியில் வரும் 'எண்குணத்தான்' என்ற குறிப்புக்கு உரையெழுதுகையில் 'சிவாகமங்களில் குறிப்பிடப்படுவது போல' என்று சொல்வதால் வள்ளுவருக்குத் திருமண்ணைவிட திருநீறு பொருத்தமே. எனவே இங்கே வைணவமரபினர்தாம் வள்ளுவருக்குத் திருநீறு பூசினர் என்று திரு.இபா சொல்லியிருந்தால் தெளிவாயிருக்கும்.

அது கிடக்கட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.

திருக்குறளை வைத்து வள்ளுவரைச் சமணரென்பதற்கு யாதொரு அடிப்படையும் இல்லை. ஆய்ந்து நோக்கின் திருக்குறள் பெயரிலாப் பெருவழியான இந்துஞானமரபின் அறநூலே! இத்திறக்கில் அடியேன் கடந்த சில வருடங்களாக இணையத்தில் பல குழுமங்களில் பல சமண அறிஞர்களுடனும் வாதிட்டு இக்கருத்தை நிறுவியுள்ளேன். விரிவஞ்சி விடுத்து சாரமான சில சான்றுகளை மட்டும் கீழே தருகிறேன்.

1. அத்திநாத்தி வாதம் என்ற சமணர்தம் ஆதாரக் கோட்பாட்டினைச் சுட்டும் ஒரு பாவினைக் கூட திருக்குறள் நெடுகத் தேடினாலும் கிட்டாது. மேலும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் 'உளது இலது' என்று முரண்படும் இந்த ஆதார நம்பிக்கையைத் தாக்கினரே அன்றி சாதாரணச் சமணர்களை அல்ல.

2. பொதுவாய் சமணத்திற்குச் சான்றாய்ச் சுட்டப்படும் 'அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என்ற (குறள் 259) குறளில் வேட்டலை உயர்வுநவிர்ச்சியிலே குறிப்பிட்டிருக்கிறாரே அன்றி சமணர் ஏற்காத வேள்விகளைச் சாடவில்லை என்பது பிறிதோரிடம் (குறள் 413) 'செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றோரொடு ஒப்பர் நிலத்து' என்று சொல்வதன் மூலம் அறியலாம். 'அவியுணவின் ஆன்றோர்' (Havis consuming celestials) என்ற சொல்லாட்சியும் இங்கே உயர்வுநவிர்ச்சியிலே சொல்லப்பட்டிருப்பதன் மூலம் வள்ளுவர் வேதவேள்விகளுக்கு எதிரானவர் அல்ல என்றும் தெளியலாம்.



3. மேலும் சிறுதெய்வங்களுக்குப் படையல் வைப்பதும், மூதாதைகளுக்குப் படையல் வைப்பதும் (குறள் 43) சமணத்திற்கு ஏற்புடையது அல்ல.

4. குறள் 550 -ல் 'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்' என்று மரணதண்டனையை நியாயப்படுத்துவது எவ்வகையிலும் அஹிம்சை போற்றும் சமணத்திற்குப் பொருந்தாது. சமண அறநூல்களில் மரணதண்டனை தீர்ப்பாகச் சொல்லப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மன்னன் முறைதவறினால் அந்தணர் கடமைகளான வேட்டல் வேட்பித்தல், கற்றல், கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகிய அறுதொழில் நலியும் என்றும் அவர்தம் நூலையே மறப்பர் என்றும், வேள்விக்கும் ஆலயவழிபாட்டிற்கும் அவசியமான ஆபயன் (பஞ்சகவ்யம்) குன்றும் என்றும் (குறள் 134, 560) வள்ளுவர் வலியுறுத்துவதையும் நோக்கினால் வள்ளுவத்தின் அடிநாதம் சமணம் அல்ல என்று தெளியலாம்.

6. கடவுள் வாழ்த்திலே 'மலர்மிசை ஏகினான்' என்பதை சமணர்தம் ஆதிநாதர் மலரிலே நடந்தவர் என்பதால் சொல்கிறார் என்று சிலர் சொல்வதுபோல் பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் 'நிலமிசை நீடுவாழ்தல்' எவ்வகையிலும் பொருந்தாது. 'நிலமிசை நீடுவாழ்தல்' (மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சம்பந்தர் தேவாரம்) என்பதே சமணத்திற்குப் புறம்பானது. இது போலவே இதர கடவுள்வாழ்த்துப் பாக்களுக்கும் சமணர்தம் அத்திநாத்திய சியாத்வாதக் கோட்பாட்டிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

7. பல குறட்பாக்கள் பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் திருமந்திரப் பாக்களை ஒத்திருப்பதைக் காணலாம். 'பகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தான்' போன்ற விளிகள் சமணருக்குச் சொந்தமானதல்ல. காட்டாய்:

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
*அறவாழி அந்தணன்* ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம் புகுந் தானே!
திருமந்திரம் - 1803

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்றவூழிகள்
செல்லூழி யண்டத்துச் சென்றவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ளொன்றிற் *பகவனே*.
திருமந்திரம் - 2533

கொல்லான் பொய்கூறான் களவிலன் *எண்குணம்*
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே.
திருமந்திரம் - 554

இங்கே சிவாகமங்கள் சுட்டும் எண்குணங்கள் ஆவன: தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை மற்றும் வரம்பில் இன்பமுடைமை.

'எட்டுகொலாம் அவர் ஈறில் பெருங்குணம்' என்று அப்பர் பெருமானும், 'எண்குணம் செய்த ஈசனே' என்று மாணிக்கவாசகரும் பாடுவர்.
அதனாற்றான் சிவாகமங்களில் சுட்டியபடி என்று பரிமேலகரும் உரையெழுதுகிறார்.

8. மேலும் எளிதில் பொருள்விளங்கா பல அதிநுட்பமான குறட்பாக்களுக்கு வேதாந்த சைவசித்தாந்த அடிப்படையில் மட்டுமே மெய்ப்பொருள் கொள்ளமுடியும். காட்டாய்:

'அல்லல் அருள் ஆள்வார்க்கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி' (குறள் 245)

என்ற குறளில், அருள் ஆள்பவர்க்கும் வளிக்கும் உள்ள தொடர்பை சித்தாந்தரீதியில் அணுகினால் ஒழிய பொருள் விளங்காது.
இதன் சூக்குமத்தை

'வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே'

என்ற திருமந்திரத்தின் துணை கொண்டும் தெளியலாம்.
அது போலவே

'குடம்பை தனித்தொழிய புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு'

என்ற குறளில் (338) ஆன்மாவின் இயல்பைச் சுட்டுவதும் அத்திநாத்தியத்திற்கு ஒவ்வாதது. இது வேதாந்தக் கோட்பாடு. அவ்வண்ணமே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுதலும்.

9. சைவசித்தாந்த சாத்திர நூல்களில் திருக்களிற்றுப்படியார் என்ற நூல் முதன்மையானது. இதில் இரண்டு குறட்பாக்கள் நேராகச் சுட்டப்பட்டுகின்றன:

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற்
சார்புணர்த றானே தியானமுமாஞ் - சார்பு
கெடவொழுகி னல்ல சமாதியுமாங் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று. (34)
* குறள்: மெய்யுணர்தல்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்
வேண்டின� தொன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால். (40)
*குறள்: அவாவறுத்தல்

சமணக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சைவசித்தாந்த சாத்திரநூல் பாடப்பட்டது என்பது நகைமுரணாகும்.

அவ்வண்ணமே சைவத்திருமுறையிலே சேரமான்பெருமாள் நாயனார் கயிலையில் சிவனார்தம் ஆசிகொண்டு பாடிய 'திருக்கயிலாய உலா' என்ற நூலில் திருக்குறள் ஒன்று தெளிவாய்க் குறிப்பிடப்படுகிறது:

'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர் கட்டுரையை..' (173/174)

10. இறுதியாய் ஒன்று. அஹிம்சை என்பது சமணர்க்கு மட்டுமே குறிக்கோள், ஆதாரக்கோட்பாடு என்பதும் பிழை. யோகமார்க்கத்தில் அஹிம்சையை இந்துசமய நூல்கள் அனைத்துமே வலியுறுத்துகின்றன. ஆயின் சமணத்தைப் போலன்றி அதை முக்திக்கு ஒரே வழியாக வைக்கவில்லை. 'யோகியர் பெறும் பேற்றினையே சாங்கியரும் பெறுவர்' என்ற கண்ணபிரானின் கீதைப்பேருரைக்குச் சான்றாய் வேடர் கண்ணப்பரையும், மீனவர் அதிபத்தரையும் அவர் போன்ற எண்ணற்ற மகான்களையும் காண்கிறோம். வள்ளுவரும் புலால் மறுத்தலை அனைவருக்கும் வலியுறுத்திச் சொல்ல்லவில்லை.

புலால் மறுத்தலை வலியுறுத்துவது யாரிடம்?

'துறவியலில்', யோகத்திலாழ்ந்து தவம் மேற்கொள்வோர்க்கு, நோற்பார்க்கு மட்டுமே. அது அமணர்க்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பொதுவானது. 'சமாதி'யில் (semedi) அமைய வேண்டி, ஒரு மண்டலம் நோன்பிருக்கும், மரக்கறி உணவே பழகாத ஜாவானியர் கூட அந்த நாற்பது நாள்களில் புலால் (முட்டை கூட) உண்பதில்லை.

புலால் மறுத்தலை வேறெங்காவது சொல்கிறாரா?
குடியியலில் ஓரிடத்தில் சுட்டுகிறார்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. (984)

ஆக, கொல்லாமை என்பது நோற்பார் மட்டுமே கொளத்தகும். ஆயின் அவர் பெரும்பான்மையினரா? என்றுமில்லை. அவரே சொல்கிறார்:

இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். (270)

வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'கொல்லாவிரதம்' அனைத்துத் தரப்பினர்க்கும், 'துறவியல்' மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும் எங்காவது ஓரிடத்திலாவது வலியுறுத்தப் பட்டிருக்கும்.
அப்படி அமையவில்லை என்பதை ஓர்க!

பொதுவில் பெரும்பான்மைக்கு, குறிப்பாய் நட்பியலில், 'மருந்து' (அதிகாரம் 95) எது என்று குறிப்பிடுகையில், 'செரித்தது கண்டு, அளவறிந்து உண்க' என்று பல பாக்களில் சொல்லிப் போகிறாரே அன்றி ஓரிடத்திலும் 'புலால் மறுத்தலே சிறந்த மருந்து, உடல்நலத்திற்கு ஏற்றது' என்று சொல்வதில்லை.
தமிழர் உணவுப்பழக்கத்தில் புலால் தவிர்க்க முடியாத அம்சமாய் இருப்பதை தொன்றுதொட்டுக் காண்கிறோம்.

ஓரிடம் நிணத்தைத் தீயிலிட்டு வாட்டுவதைக் காண்கிறார் வள்ளுவர். கண்டிக்கவில்லை; கலங்கவுமில்லை. மாறாய் நின்று ரசிக்கிறார். புசித்துமிருக்கலாம். எப்படியோ, சமணராய் வெறுத்து ஒதுக்கி ஓடியிருந்தால் அதனை ஓர் உவமையாய்க் குறளில் (that too approvingly) அமைத்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.

காமத்தீயில் நிறையழிந்து நிற்கும் பெண்மைக்கு அதைச் சுட்டுகிறார் இங்கு:

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்? (1260)

அன்புடன், ஜாவா குமார்

9 comments:

Anonymous said...

நீதி, தர்மம் பற்றிய விளக்கம் அருமை, ஜடாயு.

ஜாவா குமார் அவர்களின் அற்புதமான கட்டுரை அவரது ஆழ்ந்து அகன்ற தமிழ்ப்புலமைக்குச் சான்று பகர்கின்றது. திருவள்ளுவர் பற்றிய ஆய்வில் இக்கட்டுரை ஒரு பொக்கிஷம். இதனை எடுத்து இட்டதற்கு மிக்க நன்றி.

- சிவசுப்பிரமணியன்

Anonymous said...

Great! Simply great! Vazka Valluvam! Vazka Bharatam!
- Iniyan Rajan

Anonymous said...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

நமது கர்மாக்களே நம்மை வழி நடத்துகின்றன என்கிற தத்துவ அடிப்படை கொண்ட சமணம் தெய்வத்தை ஏற்றுக்கொண்டதாக எனக்கு தெரியவில்லை . அப்படியிருக்க வானுறையும் தெய்வத்தை கூறும் வள்ளுவர் எப்படி சமணராக இருக்க முடியும்

Subu said...

திரு ஜடாயு அவர்களுக்கு

உங்கள் இடுகையை கண்டேன். உங்கள் சிந்தனையும், மேற்கோளும் அபாரம். உங்களுக்கும் திரு ஜாவா குமார் அவர்களுக்கு நன்றிகள்

திரு ஜாவா குமாரின் வலைப்பதிவு இருந்தால் சொல்லவும்

அறம் பொருள் இன்பம் என்று மட்டும் திருவள்ளுவர் நின்றதேன், வீடு பேற்றை பற்றி எழுதவில்லையா ? அல்லது, அறம் பொருள் இன்பம் மூன்றும் முறையே அமைந்துவிட்டால் வீடூ பேறு தானே அமையும் என என்ணினாரா என்று எனக்குள் பல கேள்விகள் எழுவதுண்டு ...இயலுமாயின் அது பற்றியும் எழுதவும்

அன்புடன்
சுப்பு

Anonymous said...

http://www.tamilpaper.net/?p=882

தமிழ்பேப்பரில் ராம் சொல்லி இங்கே வந்தேன். இந்தக்கட்டுரை ரொம்பப் பிரமாதம் சார். நான் கூட திருவள்ளுவர் எந்த மதமும் சாராதவர் என்ற பொய்யை இத்தனை நாள் நம்பியிருந்தேன். இன்றைக்கு தீபாவளி நாளில் ஒளி கிடைக்கச் செய்தீர்கள். மிக்க நன்றி!
- ந.இளங்கோவன், கோவைபுதூர்

gujjan said...

superb explanation!!! Jeyamohan cannot counter this

gujjan said...

superb explanation.. Jayamohan cannot refute these points

Unknown said...

It is what exactly essential now for the scholars of Tamil lit and thinkers. Being great lover of Thirukural many times I believe that Valluvar would belong to Sana Dana Dharma without much support. After reading ur article i am highly delighted. I came to this site few days back for a reference from Thulikal article. But i am not going back to Thulikal site as this Hindu.com provides a lot of matter which I have been longing for many years. I thank everyone in this site to contribute to bring the existing truth to the next generation. Vazhka ungal sevai valarka namathu thalam . Jai Hind.

Unknown said...

It is what exactly essential now for the scholars of Tamil lit and thinkers. Being great lover of Thirukural many times I believe that Valluvar would belong to Sana Dana Dharma without much support. After reading ur article i am highly delighted. I came to this site few days back for a reference from Thulikal article. But i am not going back to Thulikal site as this Hindu.com provides a lot of matter which I have been longing for many years. I thank everyone in this site to contribute to bring the existing truth to the next generation. Vazhka ungal sevai valarka namathu thalam . Jai Hind.