பெண்மை வாழ்க என்று கூத்திடுவோம்!
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும். 1
அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம். 2
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம். 3
பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா. 4
சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஒத்தி யல்வதோர் பாட்டும் குழல்களும்
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம். 5
உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே. 6
'போற்றி தாய்' என்று தோள் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே. 7
'போற்றி தாய்' என்று தாளங்கள் கொட்டடா!
'போற்றி தாய்' என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே. 8
அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்
- மகாகவி பாரதி
உலகப் பெண்கள் நாளில் பெண்மையின் புகழை வாழ்த்தும் விடுதலைக் குயில் பாரதியின் பாடலை இங்கே பதிவு செய்கிறேன்.
எல்லாப் பெண்களுக்கும் எனது வாழ்த்துக்கள், வணக்கங்கள், அன்புப் பகிர்தல்கள்.
உண்மையும், திண்மையும், வண்மையும், மென்மையும் உருக்கொண்ட பெண்மை வாழ்க!
8 comments:
// புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே //
ரொம்ப அழகாக இருக்கிறது இந்த வரி.
இந்தப் பாடலைத் தந்ததுக்கு மிக்க நன்றி ஜடாயு.
பெண்மையை எப்போதும் போற்றிய நமக்கு, ஒரு தனி தினம் தேவையா?
மகளிர் நாளில் மகாகவியின் பாடலைத் தந்ததற்கு மிக்க நன்றி.
மயிலிறகில் கண்ணன் ராதை படம் மிக அழகு.
Hi Jadayu, Thanks and happy women's day! A very nice song of Bharathi, but I have never seen it sung in popular music. It would be stirring to hear this sung!
- Lakshmi
Hari said...
// பெண்மையை எப்போதும் போற்றிய நமக்கு, ஒரு தனி தினம் தேவையா? //
ஹரி, தேவையில்லை தான்.
ஆனால் உலகமயமாக்கம் என்று சொல்லுங்கள், இல்லை நுகர்வுக் கலாசாரம் என்று சொல்லுங்கள்.. எப்படியோ இந்த தினம் நம் சமூகத்துக்குள் ஊடுருவி விட்டது. மீடியா முழுவதும் அரக்கப் பரக்க இதைக் கூவிக் கொண்டிருக்கிறது.
இதைச் சாக்கிட்டு, பெண்மை பற்றிய நம் இந்திய சிந்தனையையும் நினைவு கூரலாமே! மற்றபடி மகளிர் தினத்தைக் கொண்டாடித் தான் ஆகவேண்டும் என்ற கட்சி இல்லை நான்.
// A very nice song of Bharathi, but I have never seen it sung in popular music. It would be stirring to hear this sung! //
லஷ்மி, எப்போதோ தூர்தர்ஷனில் ஒரு சேர்ந்திசையில் இந்தப் பாட்டைக் கேட்டது மாதிரி ஞாபகம்.
ஆம், இசைக்க அருமையான பாடல் இது.
நமக்கு மகளிர்தினக் கொண்டாட்டம் அவசியம் இல்லை.ஆனால் அதைச் சாக்கிட்டு பெண்களுக்காக புதிதாக ஏதாவது நடந்தால் நல்லதுதானே.
நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்படும் பெண்களைப் பற்றிக் கவலை இல்லை.
அப்படி இல்லாதபோது பிரச்சினைக்குள் அடிபடுவோருக்குக்காக இந்த நாள் பேசப்படலாம்.
இதே போல் ஆடவர்தினமும் வந்து தந்தையரைத்,தம்பியரை பெரியோரை மதிக்கும் நாட்கள் கூட நாம் கொண்டாடலாம்.ஏனெனில் குடும்பத்தில் காணாமல் போகும் மதிப்புக்குரிய தந்தைகளையும் பார்த்திருக்கிறேன்.
நன்றி ஜடாயூ. பாரதிக்கும் உங்களுக்கும் வணக்கம்.
விற்பனை வித்தகத்திற்கு விழி மலரும் இளைய உலகம் மனிதம் எனும் உரு துறந்து வெறும் வாடிக்கையாளர்களாய் வஞ்சகம் புரியாமல் வலையில் தன்னை பிண்ணிக்கொள்ளுகின்றது.
நம் மகளிர் நற்பெருமை சிறப்பிக்க நவராத்திரிகள் நமக்கிருக்கின்றன. பெண்டிராய் பிறந்ததே பெருமை எனச் செய்து மனிதத்தின் முழுமைக்கு மலரஞ்சலி செய்யும் நாட்கள் அவை. அவற்றை விலக்கும் வியாபார உத்திகள் காதலர் தினம், பெண்டிர் தினம் என்கின்ற பெயரில் போகப் பொருட்களாய் நம் யோக வரங்களை குன்றச் செயும் நிலை அறிவீர்.
நமக்கே உரித்தான காதலர் தினம் - வடவர்களுக்கு ஹோலியாய், தமிழருக்கு இந்திர விழாவாய், காணும் பொங்கலாய் எத்தனையோ வடிவங்களில் காதலின் பெருமை பாடிவரும் பரந்த நிலமிது - மனத்தாலும், குணத்தாலும், கொண்ட கருத்தாலும் பரந்திருக்கும் மாநிலத்தின் மாந்தர் பாடிய பாடல்கள் பல. இங்கே சில:
கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்
செயலெழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர் !
திங்களோ காணீர் ! திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண் ஏர் வானத்து அரவஞ்சி வாழ்வதுவே
பொழில்தரு நறுமலரே, புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே, பணையிள வனமுலையே
முழுமதி புரைமுகமே, முரிபுரு வில்லிணையே
எழுதரும் மின்னிடையே எனை இடர் செய்தவையே
திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே
விரைவிரி நறுமலரே, மிடைதரு பொழிலிடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே
வளைவளர் தருதுறையே, மணம்விரி தருபொழிலே
தளையவிழ் நறுமலரே, தனியவள் திரியிடமே
முளைவளர் இளநகையே, முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே
நம் பெண்டிர் பெருமை பேசும் பா:
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஓச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி
Post a Comment