Saturday, October 07, 2006

கொலைகாரக் கொசுக்கள்: தொடரும் சுகாதார அவலம்

கொலைகார அப்சலுக்கு மரணதண்டனை கொடுப்பதா வேண்டாமா என்று விவாதம் தூள் பறந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. Aedes Aegypti, Aedus Albopictus என்கிற இந்த ஜாதிக் கொசுக்கள் ஜாதி வித்தியாசம் பாராமல் எல்லாரையும் சகட்டு மேனிக்குப் பகலிலும் இரவிலும் கண்ட நேரங்களிலும் கடித்துத் தள்ளி வருகின்றன. பிரதமரின் பேரர்கள் முதல் மூன்றாந்தர ஹோட்டல் 'பேரர்கள்' வரை யாரும் விதிவிலக்கல்ல. நோகாமல் நொங்கு தின்று வந்தவர்கள் கூட நோய்ப்பட்டு டெங்கு வந்து கிடக்கிறார்கள். சிகுன்குனியா போன்ற வாயில் நுழையாத பெயரெல்லாம் சிக்கன் பிரியாணி போல சர்வ சாதராணமாகி விட்டது.

இன்றைய தேதியில் தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு நம் நாட்டை இந்தக் கொசுக்கள் அச்சுறுத்தி வருகின்றன. நாட்டின் நம்பர்-ஒன் மருத்துவ நிறுவனம் என்று 'போற்றப்படும்' தில்லியிலுள்ள ஏ.ஐ.ஐ.எம்.எஸ்-ல் பணிபுரியும் 30 டாக்டர்களையே டெங்கு நோய் தாக்கியுள்ளது, ஒரு டாக்டரை ஏற்கனவே பலிவாங்கியும் விட்டது. டெங்கு நோயாளிகள் நிரம்பி வழியும் வார்டுகளில் திறந்து கிடந்த குப்பைத் தொட்டிகள், தேங்கியிருக்கும் தண்ணீர் இவையே இதற்குக் காரணமாக சொல்லப் படுகின்றன. இருப்பினும் வேறு வழியில்லாததால் நோயாளிகள் இந்த மருத்துவமனையைத் தான் நாட வேண்டும். எல்லா ஊர்களிலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் தேர்க் கூட்டம் திருநாள் கூட்டம் போல டெங்கு ரத்தப் பரிசோதனை வரிசைகள் நீண்டு கொண்டிருக்கின்றன.

கேரளாவில் ஏற்கன்வே 81 உயிர்களைப் பலிவாங்கி விட்டது சிகுன்குனியா. இந்த நோய் குறிப்பிட சூழல் சார்ந்ததா (endemic) இல்லை இஷ்டத்துக்குப் பரவும் தொற்றுநோயா (epidemic) இதில் எந்த வகை என்று ஒருவழியாகச் சண்டை முடிந்து இப்பொழுது தொற்றுநோய் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே ஒரு மாதிரி குளிரும், வெயிலும் கலந்த நச நச தட்பவெப்பநிலை உள்ள எங்கள் பெங்களூரில் இத்தகைய நோய் பரவும் அபாயம் அதிகம் என்று அபிப்பிராயம் உள்ளது. கர்நாடகம் முழும் டெங்கு தாக்கலாம் என்றும் அஞ்சப் படுகிறது. அதனால் இதைத் தடுக்கும் முகமாக 888 ஸ்ப்ரேய்ங் மெஷின்களும் 5000 லிட்டர் pyarathrium மருந்தும் தயாராக (!!) இருப்பதாகவும் 3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக மருந்தைத் தெளித்து நோய் வரவிடாமல் தடுக்கப் போவதாகவும் மாநில அரசு சூளுரைத்துள்ளது. பார்ப்போம்.

மூன்றாம் உலக நாடுகளுக்கே உரித்தான இத்தகைய நோய்களெல்லாம் நம் நாட்டில் வசிக்கும் மூன்றாந்தரக் குடிமக்களைத் தான் தாக்கும் என்று தான் எண்ணிவந்தோம். ஆனால் சமத்துவக் குட்டையில் பிறந்த கொசுக்கள் இதைப் பொய்யாக்கி விட்டன. சேலத்தில் வசிக்கும் என் உறவினர்கள் குடும்பத்தோடு போன மாதம் சிகுன்குனியா தாக்கி, மீண்டு இன்னும் மூட்டு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹைதராபாதில் வசிக்கும் என் ஆபீஸ் பாஸின் வயதான அப்பாவையும் பகல் தூக்கத்தின் போது இந்தக் கொசுக்கள் பதம் பார்த்திருக்கின்றன. ஒரு வருடம் முன்பு என் மைத்துனரின் 2-வயது மகனை டெங்கு தாக்கி நுங்கம்பாக்கம் சைல்ட் ட்ரஸ்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். உடம்பின் பல இடங்களில் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்காக ஊசி குத்தியிருந்த குழந்தயைப் பார்த்தது கொடுமையிலும் கொடுமை. கண்களில் ரத்தக் கண்ணீர் வந்தது. 10 நாட்கள் அட்மிட் ஆகி ஒருவழியாக சரியாயிற்று. குழந்தையைப் பார்க்கப் போனபோது அந்த ஃப்ளோர் முழுக்க டெங்கால் அடிபட்டுக் கிழந்த சின்னஞ்சிறு குழந்தைகள் கட்டில்களில் படுத்துக் கிடந்தன, சில குழந்தைகள் வயிறு உப்பி பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தன.

இவையெல்லாம் நல்ல வசதி படைத்த, சுகாதாரத்தைப் பேணும் நடுத்தர, மேல் நடுத்தர வீட்டுக் குழந்தைகள். இந்தக் குழந்தைகளுக்கே இந்தக் கதி என்றால் சுகாதாரமற்ற சேரிகளில், கஷ்டப் படும் குடும்பங்களில் வளரும் குழந்தைகள் கதி எப்படியாகும் என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

காரணம்? கொசு ஐயா, ஜஸ்ட் கொசு! இந்த 50-ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் நோய் பரப்பும் இந்தக் கொலைகாரக் கொசுக்களைக் கூட நாம் ஒழிக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு.

பழகி விட்டோம், கொசுக்களுடன் வாழப் பழகி விட்டோம். இன்று நேற்றல்ல நூற்றாண்டுகளாக என்று தோன்றுகிறது. ஆங்கிலத்தின் mosquito என்ற வார்த்தை லத்தீன் musca-வில் இருந்து வந்தது. இது சம்ஸ்கிருதத்தின் "மஷகீ" என்பதிலிருந்து வந்திருக்கலாம். ஆகக்கூடி, உலகத்திற்கே கொசுவுக்குச் சொல் வழங்கியது நாம் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம்! ஒவ்வொரு வருடமும் தீபாவளி பொங்கல் போல இந்த நோய்கள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன.

கொசுக்கடி என்பதை வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டோம். நகரமோ, கிராமோ, எவ்வளவு பெரிய வீடுகளாக இருந்தாலும் அங்கு ஏதாவது ஒரு கொசுவிரட்டு வழிமுறை இருக்கத் தவறுவதில்லை - வலை அடித்த ஜன்னல்கள் அல்லது திறக்கப் படக் கூடாத ஜன்னல்கள், ஆல்அவுட் போன்று புகை விட்டுப் பகையழிக்கும் திரவங்கள் இல்லை பழைய மாடல் சுருள்கள் இப்படி ஏதாவது ஒன்று. இதையெல்லாம் செய்ததால் பெருமளவு தப்பித்தோம்.

யார் இதற்குப் பொறுப்பாளி? அரசா, சமுதாயமா என்றெல்லாம் வழக்கம்போல விவாதம் நடக்கிறது. எல்லாரும் தான் என்பதில் போய் அது முடியவும் செய்கிறது. கொசு என்பது இயற்கையின் ஒரு அங்கம், அதை எப்படி ஒழிக்க முடியும் என்றெல்லாம் கூட கேட்கப் படுகிறது ! மக்கள் நெரிசல் உள்ள உலகின் பல நகரங்களில் கொசுதொல்லை என்பதையே பார்க்க முடியவில்லையே, எப்படி சாதித்தார்கள்?

அறிவியல் இவ்வளவு தூரம் முன்னேறி விட்ட இந்த நூற்றாண்டில், இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி கொசுக்கள் உருவாவதை, பரவுவதைத் தடுக்க இந்தியாவில் நாம் என்ன செய்திருக்கிறோம் என்று கேட்கத் தோன்றுகிறது. என்று ஒழியும் இந்த சுகாதார அவலம்?

9 comments:

வஜ்ரா said...

ஜடாயு,

இந்த வகைக் கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டை போட்டு வளருவன...

ஆகயால் A/C போன்ற உபகரணங்களில் தங்கியிருக்கும் காற்றின் ஈரப்பததில் இது முட்டை போடுவதால் மேல் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கும் இந்த வியாதி வருகின்றது...

வெய்யில் காலம் முடிந்ததும் இந்த A/C களை சுத்தம் செய்தாக வேண்டும். அதை யாரும் செய்வதில்லை.

ஜடாயு said...

வஜ்ரா, கரெக்ட். லெல்லியில் ஏர்கூலரிகளில் தேங்கியிருந்த தண்ணீரரை மக்கள் ரெகுலராக சுத்தம் செய்யமல் இருந்ததும் ஒரு காரணம் எனூ கூறியிருக்கிறார்கள்.

Anonymous said...

இதற்கு மூல காரணம் எனக்கு தெரிந்துவிட்டது.

இது ஆறிய வந்தேறி பார்பணர்களின் திட்டமிட்ட சதி.

இந்த நோய் பரப்பும் கொசுக்களை பரப்பியவர் யார் என்பதை வஞ்சகமாக ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டு அப்சல் தூக்கு தண்டனை செய்திக்கு மட்டும் அதிக முக்கியதுவம்
கொடுப்பதிலிருந்து தெரியவில்லையா?? இவர்களின் இரட்டை நாடகம். இதை நான் வன்மையாக
கண்டிக்கிறேன்.

சுந்தரம்

Muse (# 01429798200730556938) said...

ஜடாயு ஐயா,

ப்ரமாதமாக எழுதியிருக்கிறீர்கள். (பெரிய எழுத்துப் ப்ரமாதம்)

நகைச்சுவையாய் தொடங்கியிருந்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை பதறவைக்கிறது.

அப்புறம்.. (ஒரு நிமிடம் பொறுங்கள். கொஸு வலை இல்லாத ஜன்னல் கதவைச் சாத்திவிட்டு வருகிறேன்.)

அப்புறம், திண்ணை வாஸகர்களுக்கு இத்தைப் படிக்கும் பாக்யம் உண்டா?

ஜடாயு said...

ம்யூஸ், நன்றி.

// திண்ணை வாஸகர்களுக்கு இத்தைப் படிக்கும் பாக்யம் உண்டா //

திண்ணையில் ரொம்ப கொசு கடிப்பதால் அங்கே உட்கார்ந்து படிக்க முடியாது.. உள்ளே வந்து தான் படிக்க வேண்டும் :))

ஜடாயு said...

// இதற்கு மூல காரணம் எனக்கு தெரிந்துவிட்டது.

இது ஆறிய வந்தேறி பார்பணர்களின் திட்டமிட்ட சதி. //

ஹா ஹா ஹா..

சுந்தரம் அவர்களே, You are Tamilmanam material!

ஜடாயு said...

இது பற்றி பூங்காவில் யதேச்சையாகச் சந்தித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பிரிகேடியர் ஸ்ரீநிவாஸ் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட அவர் தன் தந்தையார் நாட்டின் மலேரியா ஒழிப்பு (பெருமளவு குறைப்பு?) முயற்சிகளில் பெரும் பங்காற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

மரபணுத் தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துள்ள நிலையில் இதைப் பயன்படுத்தி கொசுப் பிரசினைக்கு ஏதாவது தீர்வு காண முடியுமா என்றும் விவாதித்தோம். நோய்பரப்பும் கொசு ஜாதிகளின் மரபணுக்களில் மாற்றம் ஏற்படுத்தி (genetic modifications), அவை கடிக்கும்போது ரத்தத்தை உறிஞ்சாமலும், தங்கள் நச்சுத் தன்மையை உடலுக்குள் செலுத்தாமலும் செய்ய வைக்க முடியுமா என்று நான் கேட்டேன். மரபணு தொழில்நுட்பத்தின் மூலம் கொடிய நச்சுப் பாம்புகளின் விஷத் தன்மையை அகற்றிவிட்டு அவற்றை செல்லப் பிராணிகள் போல வீட்டில் வளர்க்க முடியும் என்று எங்கோ படித்திருந்தேன்.

இந்த ஜாதிக் கொசுக்களின் ஒரு தலைமுறையை இப்படி மரபணு மாற்றம் செய்து செயலிழக்க வைத்து, இவற்றை வீரியம் குறைந்த மற்ற ஜாதிக் கொசுக்களுடன் கலந்து இனப்பெருக்கம் செய்ய வைத்து இந்தக் கொலைகாரக் கொசுக்களின் மரபணுக் குழுமத்தையே (gene pool) குழப்படி செய்துவிட்டால், அடுத்த தலைமுறைக் கொசுக்கள் சாத்வீகமானதாக இருக்குமா என்றெல்லாம் கேள்வி எழுப்பினேன். கொசுக்கும்பலை ஒரேயடியாக ஒழிக்க முடியாது என்கையில் குறைந்த பட்சம் இப்படியாவது செய்யலாமே?

இது ஏதோ அறிவியல் கற்பனை என்று எண்ணி விடாதீர்கள். இது பற்றி ஏற்கனவே அரசு மற்றூம் சுகாதர அமைச்சகத்துக்குத் தாம் எழுதியுள்ளதாக பிரிகேடியர் தெரிவித்தார். இது போன்ற கொசு மரபணு ஆராய்ச்சி சமாசாரங்களில் வளர்ந்த நாடுகள் தாமாக ஆர்வம் காட்டாது, ஆனால் இந்தியா இதைத் தொடங்கினால் சர்வதேச விஞ்ஞானிகளிடமிருந்து கண்டிப்பாக உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நமது அரசு எந்த அளவு இதில் முனைப்பு காட்டும் என்று தெரியவில்லை.

ஜயராமன் said...

கொசு மேட்டர் இப்போது எலெக்ஷன் முடிவுகளையே மாற்றிக்கொண்டிருக்கிறது...

கொசுவை ஒழிப்பதே கட்சிகளின் கொள்கையாக சொல்லியும் கட்சிகள் வளர்க்கிறார்கள். வறுமைக்கு பிறகு அரசியல்வாதிகளுக்கு என்றும்-பசுமையான ஒரு ப்ராப்ளம் இதுதான்.

உலகத்திலேயே ரொம்பவும் கொடுமையாக மிருகம் கொசுதான். மற்ற மிருகங்களை மனிதன் கூண்டில் அடைக்கிறான். இந்த மிருகத்துக்கோ பயந்து கூண்டில் அடைபட்டுக்கொள்கிறான்.

நன்றாக இருந்தது. நன்றி

ஜடாயு said...

வருகைக்கு நன்றி ஜயராமன்.

// உலகத்திலேயே ரொம்பவும் கொடுமையாக மிருகம் கொசுதான். மற்ற மிருகங்களை மனிதன் கூண்டில் அடைக்கிறான். இந்த மிருகத்துக்கோ பயந்து கூண்டில் அடைபட்டுக்கொள்கிறான். //

அருமையான quote !