Wednesday, November 08, 2006

அண்டம் அளாவிய காதல்

பூங்கொடியே!
பூமி அவன் திருவடி
சூரியன், சந்திரன், தீ என்னும் முச்சுடர்கள் முக்கண்கள்
அவன் மூச்சு புவனத்தின் சுவாசம்
அலைகடல் ஆடை, வானம் திருமுடி
ஆகாயம் உடல்
வேதம் முகம், திசைகள் தோள்கள், இசையே அவன் சொல்
அவனுக்காக
உன் அழகிய நிறம் குலையுமாறு ஏங்குகிறாயே பேதையே!

நாயகிக்குத் தோழி கூறுவதாக அமைந்த இந்த அற்புதமான பாடல் சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்து அந்தாதியில் வருகிறது:

“பாதம்புவனி சுடர்நயனம் பவனம் உயிர்ப்பு ஓங்(கு)
ஓதம் உடுக்கை உயர்வான் முடி விசும்பே உடம்பு
வேதம் முகம் திசை தோள் மிகு பண்மொழி கீதமென்ன
போதம் இவர்க்கோர் மணிநிறம் தோற்பது பூங்கொடியே”

நாயக நாயகி பாவத்தின் வெளிப்பாடுகளில், தலைவனை ஒரு தகைமை சான்ற ஆண், வேந்தன், அழகன், பலரும் விரும்பும் குணங்களை உடையவன் என்பதாக எண்ணி மயங்கி நாயகி அவன் மீது காதலுறுவது ஒரு தளம். இயற்கையின் வர்ண ஜாலங்களில் எல்லாம் அவனது உருவே நிறைந்திருப்பதாக எண்ணி, நிலவிலும் கதிரிலும் மழையிலும் மலரிலும் எல்லாம் அவன் உருவமே அவள் கண்களுக்குத் தோன்றி அவளை வாட்டுவது இன்னொரு தளம். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவிலும், அண்டத்தின் ஒவ்வொரு துகளிலும் அவன் உயிர்ப்பே நிறைந்திருப்பதாக எண்ணி அன்பில் ஆழ்வது இன்னொரு தளம். ஆண்தகை மேலான காதல் அண்டம் அளாவிய காதலாகப் பரிணமிக்கும் அற்புதமான ஆன்மீகத் தளம் அது.

“குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார் ”

என்னும் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி. அவன் குழல் அழகு, வாய் அழகு, கண் அழகு, தாமரை மலர்ந்து கிடக்கும் தொப்புள் அழகு… இது உடல் வயப் பட்ட காதல் மட்டுமல்ல, உலக வயப்பட்ட காதல்! “உலகும் இயற்கையுமாய் அழகை விரிக்கும் படைப்பின் விதையான பிரம்மன் தோன்றியதால் எம்பெருமான் தொப்புள் அழகின் மூலமாயிற்று” என்றே உரையாசிரியர்கள் பொருள் கூறுவார்கள்.

எல்லா இருமைகளையும் கடந்த ஒருமை சார்ந்த யோக அனுபூதி நிலையே இப்படிக் காதல் வெளிப்பாடாக நாயகி பாவத்தில் பரிணமிக்கிறது. படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற பேத எண்ணமும், அதில் முளைக்கும் கசடுகளும் இந்த பாவத்தில் இல்லை. எல்லா சிருஷ்டி பேதங்களிலும் தன்னையே உணர்ந்து அந்த சுயம் மீது காதல் கொண்டு அந்தக் காதலையே இந்தப் பிரபஞ்சம் முழுவதற்குமான பேரன்பாகப் பிரதிபலிக்கும் களிப்பு நிலை அது.

கோபிகைகள் கண்ணனிடம் கொண்ட பிரேமையில் புதைந்திருப்பதும் இந்த பாவம் தான். ஒவ்வொரு கோபிகையும் கிருஷ்ணன் தன்னுடனே ஆடியதாக எண்ணிய அனுபவம் இந்த ஒருமை நிலையிலேயே வாய்த்தது. “ஓ கிருஷ்ணா, நீ கோபிகைகளுக்கு ஆனந்தம் தரும் ஆயர்குலச் சிறுவன் மட்டுமல்ல, உடல் படைத்தவை அனைத்திலும் உள் உறைந்து விளங்கும் அந்தராத்மா அல்லவா?” ( ந கலு கோபிகா நந்தனோ பவான், அகில தேஹினாம் அந்தராத்ம த்ருக் – கோபிகா கீதம்) என்று கண்ணன் தங்களை விட்டுப் பிரிந்தவுடன் கோபிகைகளின் பிரலாபித்துப் பாடும்போதும் இந்த அத்வைத பாவம் அவர்கள் உள்ளத்தை விட்டு அகலவில்லை.

நாரத பக்தி சூத்திரம் (21...23) சொல்லுகிறது:

“ஆயர்பாடியின் கோபிகைகளே தூய்மையான பக்திக்கு உதாரணம்.
பரம்பொருளின் மேலாம் தன்மையை அவர்கள் அறியாமலோ, மறந்தோ இருந்தார்கள் என்ற அபவாதம் பொருந்தாது.
மாறாக, அது (கிருஷ்ணன் பரம்பொருள் என்ற ஞானம்) இல்லாதிருந்தால் அவர்களது பக்தி கள்ளக் காதலாகவே ஆகும்”

அளவற்ற அன்புக் கடலில் ஆழ்ந்த நம் ஆழ்வாரின் வாய்மொழி சாற்றும் –

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்

கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
கடல் ஞாலத்தென் மகள் கற்கின்றனவே

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற காற்றெல்லாம் யானே என்னும்
….
காண்கின்ற உலகத்தீர்க்கென் சொல்லுகேன்
கான்கின்ற என் காரிகை கற்கின்றனவே


இந்த உணர்வு வெறும் சொற்களால் ஆனதல்ல, ஆழ்வாரின் உள்மனத்தில் முகிழ்த்த ஆன்மீக அனுபவம். இதே உணர்வு தான் காக்கைச் சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும் பாரதிக்கு நந்தலாலாவைக் காட்டியது.

“நெரித்த திரைக் கடலில் நின்முகம் கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்
திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்
சின்னக் குமிழிகளில் நின்முகம் கண்டேன்
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்றதுன் முகம் அன்றிப் பிறிதொன்றில்லை”
(கண்ணன் பாட்டு – பாரதியார்)

என்னதான் பிரித்துப் பிரித்துப் பார்த்தாலும், காதல் வயப்பட்ட அந்த மனத்திற்கு ஒரே பொருள் தான் தெரிகிறது. வேதஞானம் ஒளிரும் அந்த மனத்தில் பேதஞானத்திற்கு இடம் இல்லை.

“காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்”


என்று கவியரசரின் உள்ளத்திலே முளைத்த சமத்துவ கீதம் சோஷலிசக் கூடாரத்தில் உருவான சொத்தைக் கோஷமல்ல, அத்வைத பாவம் தோய்ந்த ஆன்மீகப் பேரொளியின் கீற்று.

உடம்பில் தோன்றும் காதல் வெளிப்பாடுகள் அதீத கவித்துவத்துடன் சொல்லப்பட்டாலும் “ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வதுவாய ஒருத்தன்” என்று திருவாசகம் சொல்வது தான் உண்மையில் நாயக நாயகி பாவத்தின் ஆழ்நிலை என்று எண்ணத் தோன்றுகிறது. வேறு சிலர் சொல்வது போல சமயத்தளையில் சிக்கியவர்கள் தங்களைக் கட்டுடைக்கப் பயன்படுத்திய உத்தி நாயக-நாயகி பாவம் என்பதும் மிகத் தவறான பார்வை. ஆண்டாளுக்கும், மணிவாசகருக்கும், நம்மாழ்வாருக்கும் யார் சமயத் தளை போட்டது? மாறாக, இவர்களது கவிதை வெளிப்பாடுகளை புனிதமான பக்தி வேதங்களாக அல்லவா இன்று வரை இந்து சமய மரபு போற்றி வந்து கொண்டிருக்கிறது?

ஏழு நாட்களில் உலகத்தையும் சாத்தானையும் படைத்து விட்டுத் தூங்கப் போன கடவுள், தன்னை இறைத்தூதன் என்று எப்போதோ சொன்னவனை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் படுகொலை செய்யச் சொல்லும் கடவுள் இவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது இந்தப் பேருணர்வு! உலகத்தின் அனைத்து மாசு, மறுக்களையும் கழுவி அன்புப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தும் சக்தி படைத்த அண்டம் அளாவிய காதல் உணர்வு!

11 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மிக அருமையான கட்டுரை ஜடாயு சார்!
பாராட்டுக்கள். ஒர் + குத்து!

//எல்லா சிருஷ்டி பேதங்களிலும் தன்னையே உணர்ந்து அந்த சுயம் மீது காதல் கொண்டு அந்தக் காதலையே இந்தப் பிரபஞ்சம் முழுவதற்குமான பேரன்பாகப் பிரதிபலிக்கும் களிப்பு நிலை அது//

நாயகன் நாயகி நிலையை ரத்தினச் சுருக்கமாகக் காட்டி உள்ளீர்கள்!
//காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்//
தீக்குள் விரலை வைத்தால் தீண்டும் இன்பம் தெரிந்தது இதனால் தானோ?

நம்மாழ்வாரின் இந்த அத்வைத சாரம் தெறிக்கும் பாசுரங்கள் கூட நாயகியின் காதல் நிலையில் தான் வைக்கப்பட்டுள்ளன;
இது மிகப் பெரும் வியப்பு!
ஞானக் குறவஞ்சி என்றோ, தாலாட்டிலோ வைக்காமல், காதல் நிலையில் ஆழ்வார் வைத்த திறம் தான் மிக நுட்பமானது!

//உற்றார்கள் எனக்கில்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கிங்கு எல்லாரும் என்னும்,//

//உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்//

//கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்,
கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொள் உயிர்களும் யானே என்னும்//

என்றெல்லாம் மகளும், அவள் நிலை கண்டு தாயும் உருகும் உருக்கம்...நாயகன் நாயகி நிலையில் அன்றி வேறேது!
பின்னாளில் வந்த சிற்றிலக்கிய நாயகி நிலைக்கும் ஆழ்வார் பாடல்களில் உள்ள இந்நிலைக்கும் பல வேறுபாடுகள், பாருங்கள்!

சமயத்துள்ளும் போற்றித் துதிக்கப்படுவது தான் இந்த நாயகன் நாயகி நிலை என்பதை அறுதியிட்டும் சொல்லி விட்டீர்கள்!

இறைவனை, நாயகிகளான அடியார் காதலிக்க,
இறைவனோ அடியாரைக் காதலிக்கத் தானே பல உருக் கொண்டு வந்து மயக்கிச் செல்கிறான்!
உலா வரும் தலைவனைக் கண்டு ஏங்கியவள் தானே தலைவி!
இன்னும் ஆழமாகக் கண்டால் பல சமய ஆலய உற்சவங்கள் மற்றும் விழாக்களின் கரு கூட இந்த நாயகன் நாயகி பாவம் தான் என்றால் மிகையே இல்லை!

மிக நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!!

கால்கரி சிவா said...

//எல்லா இருமைகளையும் கடந்த ஒருமை சார்ந்த யோக அனுபூதி நிலையே இப்படிக் காதல் வெளிப்பாடாக நாயகி பாவத்தில் பரிணமிக்கிறது. படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற பேத எண்ணமும், அதில் முளைக்கும் கசடுகளும் இந்த பாவத்தில் இல்லை. எல்லா சிருஷ்டி பேதங்களிலும் தன்னையே உணர்ந்து அந்த சுயம் மீது காதல் கொண்டு அந்தக் காதலையே இந்தப் பிரபஞ்சம் முழுவதற்குமான பேரன்பாகப் பிரதிபலிக்கும் களிப்பு நிலை அது//


அருமையான வரிகள்

ஜடாயு said...

மிக்க நன்றி கண்ணபிரான் அவர்களே. நான் விட்டுவிட்ட திருவாய்மொழி வரிகளையும் இட்டு அருமையாக பூர்த்தி செய்துவிட்டீர்கள்.

// காதல் நிலையில் ஆழ்வார் வைத்த திறம் தான் மிக நுட்பமானது! //

ஆம். கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் எல்லாம் ஒன்று கூடும் அற்புத ஆன்மீக அனுபவம் இந்தப் பாடல். எனக்கு மிகவும் பிடித்த திருவாய்மொழிப் பாசுரங்கள் இவை.


// பின்னாளில் வந்த சிற்றிலக்கியநாயகி நிலைக்கும் ஆழ்வார் பாடல்களில் உள்ள இந்நிலைக்கும் பல வேறுபாடுகள், பாருங்கள்! //

சரியாகச் சொன்னீர்கள். காரணம் என்னவென்றால் சிற்றிலக்கிய நாயக் பாவம் என்பது ஆழ்மனத் தேடல் அல்ல. கவிதைச் சுவைக்காக காதல் உணர்வை fake செய்தது, அதனால் ஒரு செயற்கைத் தனம் இழையோடிக்கொண்டே இருக்கும்.

ஜடாயு said...

வருகைக்கு நன்றி சிவா அவர்களே.

கங்காதரன் said...

நல்ல இலக்கிய நயம் உள்ள கட்டுரை. ஆழ்வார் பாசுரங்களின் அழகே அழகு!

// ஏழு நாட்களில் உலகத்தையும் சாத்தானையும் படைத்து விட்டுத் தூங்கப் போன கடவுள் //

அடடா!

// தன்னை இறைத்தூதன் என்று எப்போதோ சொன்னவனை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் படுகொலை செய்யச் சொல்லும் கடவுள் //

அடடா!

// இவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது இந்தப் பேருணர்வு! //

நல்ல அங்கதம்.

ஜடாயு said...

நன்றி கங்காதரன் அவர்களே.

நா.கண்ணன் said...

மிக அழகான கட்டுரை. இதன் பிரதிபலிப்பாக வருகிற பதிவுகளில் 'க'வினுலகில் எழுதுகிறேன். வாழ்த்துக்கள். நாயக-நாயகி பாவத்தின் உச்சம் ஆழ்வார் பாடல்களில்தான் காணக்கிடைக்கிறது. நாராயணனை அந்தர்யாமி என்று வேதம் சொல்வதால் அவனை புவன சுந்தரனாகக் காண்பதும் எளிதாகிறது. நாயன்மார்கள் தோன்றியபின் சிவனுக்கு அந்த அந்தஸ்தைக் கொடுக்க உருவானதே 'நடராஜன்' திருவுருவம் (icon). அதில் லயிக்கமுடியும். ஆனால் பிச்சாண்டியாக, சுடலைக் காவலானக உள்ள சிவனின் மேல் காதல் கொள்தல் அரிது. ஆனால், புனிதவதியார் செய்துள்ளார். அது exception! ஆழ்வாராதிகளுக்கு கொஞ்சம் அருகில் வருபவர் மாணிக்கவாசகர். அவ்வளவுதான்.

ஜடாயு said...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி கண்ணன் அவர்களே.

// நாயக-நாயகி பாவத்தின் உச்சம் ஆழ்வார் பாடல்களில்தான் காணக்கிடைக்கிறது //

ஒத்துக் கொள்கிறேன்.

// நாயன்மார்கள் தோன்றியபின் சிவனுக்கு அந்த அந்தஸ்தைக் கொடுக்க உருவானதே 'நடராஜன்' திருவுருவம் (icon). //

நடராஜ வடிவம் இப்படித் திட்டமிட்டு எல்லாம் உருவாக்கப் பட்டதல்ல என்பது என் தாழ்மையான கருத்து. சங்கப் பாடல்களிலும், சிலம்பிலுமே அது முழுமையாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது. பல விதமான படிமங்கள் கொண்ட நடராஜ தத்துவத்தில் நாயகன் என்பது ஒரு அம்சமே. மேலும், பல நாயன்மார்களின் காலம் ஆழ்வார்களுக்கு முந்தையது அல்லது சமகாலம் கூட.

// அதில் லயிக்கமுடியும். ஆனால் பிச்சாண்டியாக, சுடலைக் காவலானக உள்ள சிவனின் மேல் காதல் கொள்தல் அரிது. //

அரிது தான். ஆனால் அந்த வடிவின் மீது காதல் உறுவது ஒரு அதீதமான ஆன்மீக நிலை. காளிதாசனின் குமார சம்பவத்தில் தவம் செய்யும் பார்வதி சிவனார் மேல் காதலுறுவது பற்றிப் பேசும் கட்டத்தில் இது அழகாக விளக்கப் படுகிறது.

புவன மோகனான கிருஷ்ணன் மேல் காதல் உறுவது மிக எளிது. அதனால் தான், வைணவத்தில் உள்ள அளவுக்கு சைவத்தில் நாயகி பாவம் பெருமளவில் அனுபவிக்கப் படவில்லை. இந்தக் கருத்தில் உங்களுடன் உடன்படுகிறேன்.

மீண்டும் கவினுலகில் சந்திப்போம்.

Anonymous said...

//நம்மாழ்வாரின் இந்த அத்வைத சாரம் தெறிக்கும் பாசுரங்கள் கூட நாயகியின் காதல் நிலையில் தான் வைக்கப்பட்டுள்ளன;
இது மிகப் பெரும் வியப்பு! //

சரியா விளங்கவில்லை...நம்மாழ்வார் காலத்தில் அத்வைதம்-துவைதம்-வசிஷ்டாத்வைதமெல்லாம் இருந்ததா?..ஏன் கேட்கிறேன் என்றால் அவரது காலம் எனக்கு தெரியாது...அவர் சங்கரர், ராமானுஜருக்கு முன் என்பதால், அன்று அவர் அத்வைதமென கொள்ளாது கூறினாரா?...

மேலும், நாயக-நாயகி பாவம் என்பது எனக்கு தெரிந்த வகையில் வசிஷ்ட்டாத்வைவமே - அது தவறா?

ஜடாயு said...

// சரியா விளங்கவில்லை...நம்மாழ்வார் காலத்தில் அத்வைதம்-துவைதம்-வசிஷ்டாத்வைதமெல்லாம் இருந்ததா?..ஏன் கேட்கிறேன் என்றால் அவரது காலம் எனக்கு தெரியாது...அவர் சங்கரர், ராமானுஜருக்கு முன் என்பதால், அன்று அவர் அத்வைதமென கொள்ளாது கூறினாரா?...//

அனானி, தங்கள் ஆர்வத்திற்கு நன்றி. அத்வைதம், த்வைதம் போன்ற தத்துவக் *கருத்துக்கள்* உபநிஷதங்களிலேயே உள்ளன. இவற்றை வைத்து வரையறை செய்யப் பட்ட தத்துவப் *பிரிவுகள்* சங்கரர் காலத்திற்குப் பின் உருவாயின.

// மேலும், நாயக-நாயகி பாவம் என்பது எனக்கு தெரிந்த வகையில் வசிஷ்ட்டாத்வைவமே - அது தவறா? //

அது ஒரு குறுகிய பார்வை என்று சொல்லலாம். நாயக-நாயகி பாவத்தின் உச்சநிலை அத்வைதத்திற்கு அருகிலேயே வரும், "யானே என்னும்" என்ற ஆழ்வார் பாசுரங்களைப் பாருங்கள். சங்கரர் "சிந்து: ஸரித் வல்லபம்" என்று பக்தியின் ஒரு நிலையை சிவானந்த லஹரியில் சொல்வார்.. கடலோடு கலந்த நதி என்பதி இதன் பொருள். இந்நிலையில் கடல், நதி என்று எப்படிப் பிரிக்க முடியும்? அது ஒன்றான அத்வைத பாவம்.

மாறாக, கடல்-அலை என்றே விசிஷ்டாத்வைத, த்வைதப் பார்வைகள் உவமை கூறும். அலை கடலைச் சேர்ந்தது தான், ஆனால் அதில் ஓர் அங்கம் என்பது போன்ற படிமம் அது.

Anonymous said...

பதிலுக்கு நன்றி ஜடாயு....வேதத்தில் எங்கு இந்த விளக்கங்கள் உள்ளது என்று கூற முடியுமா?....தெரிந்து கொள்ள ஒரு ஆர்வம்....அவ்வளவே.

வசிஷ்ட்டாத்வைதம், இறைவனுடன் கலத்தல் என்பதை நடக்ககூடியதாக (நாச்சியார் கலந்தார்)காண்பித்தது...
அதாவது ஜீவாத்மா,இறையில் (பரமாத்மாவில்) கலத்தல் என்பதால் அங்கு கடல் பரமாத்மாவாகவும், அலை ஜீவாத்மாவாகவும், கொள்ளலாம். அனால் அத்வைதம் கடல், அலை எல்லாம் பரமாத்மா என்பதாக கொள்கிறது....எது எதனுடன் இணைந்தாலும் அங்கு மிகுவது பரமாத்மா மட்டுமே.

கடல், அலை உவமையும் த்வைதத்திற்க்கு சரியல்ல என்பது என்னுடைய அனுமானம்...ஏனனில், இரண்டும் என்றும் கலத்தல் என்பது முடியாது என்பதான நிலை

மற்றபடி, உங்களூக்கு நன்றி, இந்த கருத்துக்களை பதிவதற்க்கு.