Wednesday, November 22, 2006

சொ-ர்-க்-க-ம் போன-சுல்தான்-கள்: வரலாற்றிலிருந்து

வீரர்களில் சிறந்த கிருஷ்ணராஜனே ! உன்னால் அழிக்கப் பட்ட திமிர்பிடித்த துருக்க சூரர்கள் சொர்க்கத்திற்கு வந்திருக்கிறார்கள். பிரகஸ்பதியைப் பார்த்து “பீர்” என்றும் இந்திரனை “சுல்தான்” என்றும், இந்திராணியை “பேகம்” என்றும் விளிக்கிறார்கள். அவர்கள் சலாம் போடுவதைப் பார்த்து தேவர்களுக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை!”

விஜயநகர சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற தெலுங்குக் கவிஞரான ராமராஜ பூஷணர் தம் மன்னரைப் புகழ்ந்து பாடிய பாடல் ஒன்றில் இப்படிச் சொல்லிக் கொண்டு போகிறார்.

பாரத நாட்டின் தார்மீக, காவிய மரபுகளுக்குட்பட்டு தன் மாமன்னரால் கொல்லப் பட்ட கொடுங்கோலர்களுக்கும் தன் கவிதையில் வீர சொர்க்கம் அளித்து விட்டார் கவிஞர்; பெரும்பாதகங்கள் புரிந்த கொலைகாரர்களானாலும் போர் செய்து உயிர் விட்டார்கள் என்பதாலும், கிருஷ்ணராஜனது படைகளின் தெய்வீக ஆயுதங்கள் தீண்டிச் செத்தார்கள் என்பதாலும் இவ்வாறு சொன்னார் போலும்! சிலப்பதிகாரத்தில் அரச ஆணைப்படி கொலைக்களத்தில் கோவலனை வாளால் வெட்டிய பணியாளர்கள் தங்கள் இயல்பினால் அல்ல, கள்ளுண்ட நிலையில் அப்படிச் செய்தார்கள் என்று இளங்கோ பாடிச் சென்றார் அல்லவா? அது போன்ற ஒரு அதீதமான, இந்துப் பண்பாட்டிற்கே உரித்தான கவிக் கருணையின் வெளிப்பாடு தான் இது.

காஃபிர்களுக்கு குரான் இம்மையில் வழங்கும் தண்டனைகள் உலகப் பிரசித்தம். ஜிகாதிகளாலும், காஜிகளாலும் இப்படிப் பலவிதமாகக் கொல்லப்படும் காஃபிர்களுக்கு அதற்குப் பின்னால் என்ன ஆகிறது? செத்தபின்னாலும் ஜஹன்னும் என்னும் இஸ்லாமிய நரகத்தில், 7ஆம் நூற்றாண்டு அராபியக் கற்பனைகளில் உதித்த பல்வேறு விதமான நரக வேதனைகளுக்கு அவர்கள் ஆட்பட வேண்டும். “இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான்!”

சே சே என்ன இது? 16ஆம் நூற்றாண்டின் சாதாரண அரசவைக் கவிஞரது சாதாரண இயல்பைப் பேசும்போது, உலகின் ஒரே கடைசி இறைத் தூதரது உயர்ந்த மனித நீதிப் பார்வையைப் பற்றிய பேச்சு? விஷயத்துக்குப் போவோம்.

கிபி 1509ல் பாமினி, பீஜாப்பூர், பீடார் சுல்தான்களுக்கும் விஜநகரப் பேரரசுக்கும் நடந்த போரில் கிருஷ்ணதேவராயர் பெற்ற பெரும் வெற்றிகள் தென்னகத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. இந்தப் போரில் விஜயநகரப் பேரரசு மட்டும் தோற்றிருந்தால், தென்னாடு மிகப் பெரிய, பரவலான இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு உட்படும் அபாயம் இருந்தது. கிபி 1501லேயே பாமினி சுல்தான் மஹ்மூத் காஜி முஜாஹித் விஜயநகரப் பேரரசு அழியும் வரை ஓய்வில்லாமல் ஜிகாத் செய்ய வேண்டும் என்பதாக ஒரு அரசாணை பிறப்பித்தான். இவனால் உந்தப் பட்ட முஸ்லீம் அரசுகள் எல்லாம் சேர்ந்து கிபி 1509ல் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்தன. துருக்கியிலிருந்து வந்து கர்னாடகத்தில் அடில் ஷாஹி வமிசத்தை நிறுவிய யூசுப் அடில் ஷா (இவன் Ottomon Turk இனத்தவன்), பீடாரின் முதல் சுல்தான் காசிம் பரித், நிஜாம் வமிசத்தவனான ஃபாதுல்லா இவர்களும் விஜயநகரத்தின் மீது படையெடுக்க அது தான் சரியான தருணம் என்று எண்ணினர். முதிய அரசரான வீர நரசிம்மரின் மறைவுக்குப் பின்னர், வாரிசு அரசியல் தலைதூக்குவதாக அவர்களுக்குச் செய்திகள் கிடைத்தன.

அப்போது தான் பட்டம் ஏற்றிருந்த இளவல் கிருஷ்ணதேவராயன் இந்தப் பெரும் தாக்குதலை எண்ணி அயரவில்லை. சிதறிக் கிடந்த அக்கம்பக்கத்து இந்து மன்னர்களது படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, ஒரு சாதுர்யமான திட்டம் வகுத்தான். கர்னாடகத்தின் திவானி என்ற இடத்தில் இரு படைகளும் மோதின. முஸ்லீம் படைகள் விஜயநகரப் படைகளை எந்தப் புறமும் சூழ்ந்து கொள்ள முடியாதவாறு படைகளை நடத்திச் சென்ற கிருஷ்ணதேவராயன், திடீரென்று பாமினி முஸ்லீம் படைகளைப் பின்புறமிருந்து தாக்கினான். இதனால் பெரும் பீதியடைந்த பாமினி படைகளின் நடுவாக உட்புகுந்து, துருக்கியிலிருந்து வரவழைக்கப் பட்டிருந்த சுல்தான் மஹ்மூதின் சிறப்புக் குதிரைப் படையினரை நேரடியாகத் தாக்கின இந்து வீரர்களின் குதிரைப் படைகள். இந்தப் படையை மாவீரனான கிருஷ்ணராஜன் தானே முன் நடத்திச் சென்றான். இதற்குப் பயந்து சுல்தான் எதிர்த் திசையில் தப்பி ஓட முயற்சிக்க, அது நேரடியாக அவனை விஜயநகரத்தின் நுழைவாயிலுக்கே இட்டுச் சென்றது! அங்கே காத்திருந்த துப்பாக்கி வீரர்கள் சுல்தானின் படைகளைப் பதம் பார்த்தார்கள். குதிரையிலிருந்து கீழே விழுந்து தன் மண்டையை உடைத்துக் கொண்டு சுல்தான் மஹ்மூத் உயிரிழந்தான். அவனைக் காப்பாற்ற வந்த மற்ற படைகளையும் விஜயநகரப் படைகள் அழித்தொழித்தன.

இதைக் கண்ட மிச்சம் மீதியிருந்த முகமதியப் படைகள் நாற்புறமும் சிதறி ஓடின. அந்தத் தருணம் கிருஷ்ணராஜன் அவன் புகழை இன்றளவும் நிலைநிறுத்தச் செய்யும் ஒரு காரியத்தைச் செய்தான். ஓடும் படைகளை விரட்டக் கூடாது என்ற பழைய யுத்த தர்மம் இந்தச் சூழலில் பொருந்தாது என்பதை சரியாக உணர்ந்து, சிதறி ஓடும் முஸ்லீம் படையில் ஒருவனைக் கூட விட்டு வைக்காமல் துரத்தி அழிக்க வேண்டும் என்று தன் படையினருக்கு ஆணையிட்டான். கோவில்கொண்டா கோட்டைப் பக்கம் தப்பி ஓடி புதிய படைகளைச் சேர்க்க முனைந்த அடில் ஷாவின் படைகள் அழிக்கப் பட்டன, அவனும் கொல்லப் பட்டான். கோவில்கொண்டா என்ற அதி முக்கியமான இந்தக் கோட்டை விஜயநகர் வசம் வந்தது. துருக்கியைச் சேர்ந்த இன்னொரு முஸ்லீம் தளபதி குலி குதுப் ஷா என்பவன் ரெட்டிகளின் பழைய தலைநகரான கொண்டவீடு பகுதியில் படைதிரட்டி வருவதை அறிந்த விஜயநகர தளபதி நந்தியாலா நரசிம்மன் கொண்டவீடு போரில் குதுப் ஷாவையும் கொன்று அவனது மிச்சம் மீதியிருந்த சிறு படைகளையும் கோல்கொண்டாவுக்கு அப்பால் விரட்டியடித்தான்.

இது சாதாரணப் போர் வெற்றி மட்டுமல்ல, முகமதிய அரக்கத் தனத்திலிருந்து தென்னகத்தைக் காப்பாற்றி இந்து தர்மத்தை நிலைபெற்றிருக்கச் செய்யவேண்டும் என்ற லட்சியத்துடனேயே உதித்த விஜயநகரப் பேரரசின் மாபெரும் சாதனை. விஜயநகர மன்னர்கள் “ஹிந்து ராய சுர த்ராண” “வைதிக மார்க சம்ஸ்தாபக” போன்ற விருதுகளைக் கொண்டிருந்ததே இதற்குச் சான்று.

தனிப்பாடல் திரட்டில் வரும் சில பாடல்களிலும் இந்தச் செய்திகள் கிடைக்கின்றன.

திருவாரூர் கோயிலில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் நடந்த ஊழல் தொடர்பாக தத்துவப்பிரகாசர் மனம் நொந்து மன்னரை விளித்துப் பாடியதாகக் கூறப்படும் இந்தப் பாடலில், கோயிலில் ஊழல் செய்த திருவீழிமிழலை (தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருத்தலம் இது) என்ற ஊர்க்காரர்களை “வீழித் துலுக்கு” என்று வசை வைத்துப் பாடுகிறார்.

ஊழித் துலுக்கல்ல ஒட்டியன் தானுமல்ல
வீழித் துலுக்கு வந்து மேலிட்டு, வாழி
சிறந்த திருவாரூர் தியாகருடைப் பூசை
இறந்ததே கிட்டின ராயா!


“ஊழி (பிரளயம்) போல நாட்டுக்குள் வந்து மக்களையும், கோயில்களையும், பூசைகளையும் அழித்த பாதகர்களான துலுக்கர்கள் அல்ல இவர்கள். அவர்களை நீ அழித்து விட்டாய். ஆனால் வீழியிலிருந்து வந்த இந்தத் துலுக்கர்கள் உள்ளே நுழைய, சிறந்து விளங்கிய திருவாரூர் தியாகராஜருடைய பூஜை நின்று விட்டதே !”

இந்தப் புகாரைக் கேள்விப்பட்ட மன்னன், சம்பந்தப் பட்ட ஊழல் ஆசாமிகளைக் கோவில் பணியிலிருந்து நீக்கி தண்டனையும் வழங்கினானாம். அதைக் கண்டு மனமகிழ்ந்து அதே தத்துவப் பிரகாசர் பாடியதாக எள்ளல் கலந்த அருமையான இன்னொரு பாடலும் உள்ளது.

உண்ட வயிற்றில் உமிக்காந்தல் இட்டதே
தொண்டரே வீழித் துலுக்கரே, பண்டமெலாம்
அப்பம் அவல் எள் அதிரசமும் தோசைகளும்
கப்புவதும் போச்சே கவிந்து!


தென்னகம் முழுவதும் பேசப் பட்ட இந்த வெற்றிகளையே “துலுக்கர் மொகரம் தவிர்த்தான்” என்று தமிழகக் கல்வெட்டுகளில் காணப்படும் விஜயநகர அரசர்களின் மெய்க்கீர்த்தி குறிப்பிடுகிறது என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இவ்வாறாக தென்னகத்தில் அப்போது முளைத்த அனைத்து முஸ்லீம் கொடுங்கோல் அரசுகளையும் அழித்து உறுதியான, செல்வச்செழிப்பு மிக்க விஜயநகர சாம்ராஜ்யம் வளர்ந்தது. வீரமும், ஈரமும், உழவும், வணிகமும், சிற்பமும், கலைகளும், இலக்கியமும் அப்பேரரசில் தழைத்து வளர்ந்தன. பொன்னும், மணியும், பவளமும் காய்கறிகளைப் போல கூறுகட்டி விற்கப்பட்டதாக ஐரோப்பியப் பயணிகள் மலைத்து எழுதிய ராஜ வீதிகளை இன்றும் போனால் ஹம்பியின் இடிபாடுகளில் பார்க்கலாம்.

அந்த இந்துப் பேரரசில் முஸ்லீம் மக்கள் பாதுகாப்புடனும், நிம்மதியுடனும் வாழ்ந்தார்கள் என்பதற்கு உறுதியான சரித்திர ஆதாரம் உள்ளது. போரில் இறந்த முஸ்லீம் வீரர்களது மனைவிகளும், மகள்களும், மற்ற எல்லா முஸ்லீம் பெண்களும் மிக்க மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்தப் பட்டார்கள். பாரசீகத்திலிருந்து வந்த யாத்ரீகர் அப்துல் ரசாக் விஜயநகரம் பற்றி எழுதுகையில், “உலகம் முழுவதிலும் இது போன்றதொரு அற்புத நகரத்தை விழிகள் கண்டதுமில்லை, செவிகள் கேட்டதுமில்லை” என்றார். போர்த்துகீசிய யாத்திரீகர் டொமிங்கோ பயஸ் “எந்த ஒரு சிறு குற்றமும் காணமுடியாது, அரசின் எல்லாத் துறைகளிலும் சிறந்தவன் கிருஷ்ணதேவராயன்” என்று குறிப்பிட்டார். இன்னொரு போர்த்துகீசிய யாத்ரீகர் பார்போஸா “எந்தவிதமான பயமோ, அச்சுறுத்தலோ இன்றி எந்த மதத்தையும் யாரும் பின்பற்றுவதற்கு முழு சுதந்திரம் விஜயநகரத்தில் இருந்தது” என்று ஆச்சரியப் படுகிறார்.

ஆனால் கிருஷ்ணதேவராயர், மற்றும் அச்சுதராயர் காலத்திற்குப் பிறகு வந்த ராமராயரை அன்றே போலி மதச்சார்பின்மைப் பேய் பிடித்து ஆட்டியிருக்க வேண்டும். விஜயநகர அரசின் படைகளில் கொஞ்சம் கொஞ்சமாக அக்கம்பக்கங்களிலிருந்து வந்த முகமதிய படை வீரர்களைச் சேர்த்து, அவர்களுக்கு உயர் பதவியும் அளிக்கத் தொடங்கினார் இவர். பின்னாளில் உட்பகையாலும், போட்டி பொறாமையாலும் விஜயநகரப் பேரரசு குலைந்து வந்த நேரத்தில், இதை எதிர்பார்த்துக் கறுவிக் கொண்டிருந்த எல்லா முஸ்லீம் அரசுகளும் சேர்ந்து தொடுத்த கொடூரமான தலைக்கோட்டைப் போரில் இந்தப் படைவீரர்கள் அத்தனை பேரும் ஜிகாதின் அழைப்பை ஏற்று எதிரிகளுடன் சேர்ந்து கொண்டனர். ராமராயர் படையின் தளபதிகளாக இருந்த கிலானி சகோதரர்கள் இழைத்த இந்த நம்பிக்கைத் துரோகமே இப்போரில் விஜயநகர அரசு தோற்க முக்கியக் காரணம் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்தப் படுதோல்வியின் விளைவாக இந்த அற்புதமான சாம்ராஜ்யம் அழிந்தது, ஹம்பி நகரம் குரூரமாக சிதைக்கப் பட்டது.

அதைப் பற்றி இன்னொரு சமயம் பார்க்கலாம். வரலாற்றிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் தான் ஏகத்துக்கு இருக்கின்றதே!

ஆதாரங்கள்:

1) A Concise History of Karnataka by Dr. S U Kamat
2) History of South India by Prof. KAN Sastry
3) India-forum.com : ஹௌமா ஹமித்தாவின் கட்டுரைகள்:
http://www.india-forum.com/authors/17/Hauma-Hamiddha
4) தனிப்பாடல் திரட்டு

15 comments:

ஜடாயு said...

test

அரவிந்தன் நீலகண்டன் said...

மிகச்சிறந்த பதிவு ஜடாயு. ஆதாரத்துடன் விளக்கியுள்ளீர்கள். இந்துத்வ பரந்தமனப்பான்மையே பலநேரங்களில் நமக்கு வினையாக முடிந்துள்ளது என்பது தெரிந்தாலும் நமக்கு அதனை மாற்றிக்கொள்ள முடியவில்லையே என்ன செய்ய? சத்குண விகிர்தி என வீர சாவர்க்கர் கூறியதே நினைவுக்கு வருகிறது. அருமையான தகவல்களுக்கு நன்றி.

மதுரையம்பதி said...

நிறைந்த விடயங்கள்.....நன்றி.

Vajra said...

இந்தக்கட்டுரையின் ஆரம்பத்தை எங்கேயோ படித்த நினைவு இருந்தது..

கடைசியில் பார்த்தால் ஹௌமா ஹமித்தாவின் கட்டுரையை ஆதாரமாகக் காட்டியுள்ளீர்கள். அதுவும் இந்தியா ஃபோரமிலிருந்து. Sultans in Svarga!!

ஷங்கர்.

ஜடாயு said...

வஜ்ரா, நன்றி.

ஆம். ஹமித்தாவின் அந்தக் கட்டுரை, தனிப்பாடல்கள் மற்றும் வேறு சில விஷயங்களைக் கலந்து தான் இந்தப் பதிவை எழுதினேன். என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது அந்தப் பெயரே நன்றாக இருந்தது, அப்படியே வைத்துவிட்டேன்.

ஜடாயு said...

நன்றி மௌல்ஸ் அவர்களே.

Anonymous said...

ஜடாயு அவர்களே,

இந்த பதிவின் காரணமாக நமது திராவிட தமிழர்கள் கிருஷ்ண தேவராயரையும் பார்பனனாக்கி, அவனையும் சென்னன பதிவிற்கு அழைத்து அதன் பின் அவனையும் திட்டி பதிவிடுவார்கள்....பார்த்துக்கொண்டே இருங்கள்.....

Anonymous said...

very informative post.

Anonymous said...

// இதை எதிர்பார்த்துக் கறுவிக் கொண்டிருந்த எல்லா முஸ்லீம் அரசுகளும் சேர்ந்து தொடுத்த கொடூரமான தலைக்கோட்டைப் போரில் இந்தப் படைவீரர்கள் அத்தனை பேரும் ஜிகாதின் அழைப்பை ஏற்று எதிரிகளுடன் சேர்ந்து கொண்டனர். //

கேட்கவே பயங்கரமாக இருக்கிறது. ஆனால், இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலானவர்கள் ஜிகாதிகள் இல்லை. ஜிகாதிகளாக இருக்கும் சிலர் இப்பொழுது பாகிஸ்தான் தீவிரவாதிகள்லுடன் இணைந்து இந்திய மக்களைக் கொல்கிறார்களே, அதை நினைவு படுத்துகிறது இது!

வரலாறு பற்றி மேலும் எழுதுங்கள். படிக்க நன்றாக இருக்கிறது.

கிருஷ்ண தேவ ராயர் ஆவி said...

ஜடாயுவே,

எனது வீரத்தையும், வெற்றிகளையும் இன்னும் நினைவு வைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி! இந்தா பிடி ஒரு நவரத்தின மாலை!

Anonymous said...

Very Nice post.

I thought "thulukkan" was a slang and derogatory term. But the poems that you have quoted use the word. Interesting!

Anonymous said...

ஹம்பியின் இடிபாடுகளைப் பார்த்திருக்கிறேன். அற்புதமான சிற்பங்கள் பாதி பாதி உடைந்து கிடப்பதை பார்ப்பது மிகவும் வேதனையான அனுபவம்..

கால்கரி சிவா said...

//எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான்!”
//

ஆ...யார் அந்த கருணையாளன்


//ராமராயர் படையின் தளபதிகளாக இருந்த கிலானி சகோதரர்கள் இழைத்த இந்த நம்பிக்கைத் துரோகமே இப்போரில் விஜயநகர அரசு தோற்க முக்கியக் காரணம் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்தப் படுதோல்வியின் விளைவாக இந்த அற்புதமான சாம்ராஜ்யம் அழிந்தது, ஹம்பி நகரம் குரூரமாக சிதைக்கப் பட்டது.
//

துரோகம் என்பது அரேபிய இரத்தத்தில் இரண்டர கலந்தது.

அக்காலத்தில் அரச பதவி யென்றால் இக்காலத்தில் கல்யாண ஆசை. என்னுடன் வேலைப் பார்த்தவனின் அப்பா தன் மகனுக்கு பதிலாக தான் செய்துகொண்டான். இவ்வளவு பணம் மஹராக கொடுத்து என் மகனுக்கு ஏன் கல்யாணம் செய்துவைக்க வேண்டும் எனக்கு இளமை இன்னும் பாக்கியிருக்கிறது என்பது அவன் வாதம்

ஜடாயு said...

// ஆ...யார் அந்த கருணையாளன் //

சிவா, அளவற்ற அருளாளன், நிகரற்ற கொடையாளன் .. அவனே தான்!

// துரோகம் என்பது அரேபிய இரத்தத்தில் இரண்டர கலந்தது. //

இப்படி பொதுமைப் படுத்துவது கொஞ்சம் ஓவர் என்றாலும், உங்களது சொந்த அனுபவங்கள், நம் சொந்த நாட்டின் அனுபவங்கள் இவையெல்லாம் இது உண்மை தான் என்றே எண்ண வைக்கின்றன.

Anonymous said...

இந்து மத்துக்கு இஸ்லாமும், கிறித்துவமுமே முதல் /அ/ முக்கிய எதிரி என்று சொல்பவர்களுக்கு சில கேள்விகள்

1. அவுரங்கசீப் காலத்தில் நடந்த பலாத்கார மத மாற்றத்தை விட இன்று இந்தியாவில் அதிக மதமாற்றம் நடந்துவிடவில்லை... நடக்கவும் இயலாது

நாம் சரித்திரத்தில் படிப்பது என்ன ? அவுரங்கசீப் இந்தியாவில் பல பாகங்களை ஆண்டான். பல ஊர்களில் கண்மூடித்தனமாய் மதமாற்றம் செய்தான். அல்லவா ?

நான் சரித்திரத்தை குறை கூறவில்லை. ஒப்புகிறேன். எனினும் இஸ்லாமே இந்துக்களுக்கு முதல் எதிரி, எனும் வாதத்தை மறுக்கிறேன் ஆகவே இந்த கேள்விகள்

அவுரங்கசீப் வாழ்ந்து சுமார் 300 வருடங்களுக்கு பின்னும் .. சமீபத்திய காலம் வரை, இந்தியாவில், இந்து மதம் நல்ல பொலிவுடனேயே இருந்தது ...

அவ்ரங்கசீப் (மாலிக்காபூர்.. சரித்திரத்தில் இடம் பெற்ற ..பெறாத இன்ன பிற இஸ்லாமிய மன்னர்கள் ) காலத்தில் பிழைத்த இந்து மதம் எப்படி (எதனால்) பிழைத்தது ??

அன்று பிழைத்த இந்து மத்துக்கு .. இன்று சுதத்திர இந்தியாவில், இஸ்லாம் [அல்லது கிறித்துவம்] அப்படி என்ன ஊறு விளைவிக்க முடியும் ?

2. இன்று இருப்பதை காட்டிலும், கிறித்துவத்துக்கு, வெள்ளையர் ஆட்சியில் செல்வாக்கும் சலுகையும் அதிகம். எனினும் வெள்ளையரின் முழு ஆட்சியை சுமார் 200 இந்து மதம் எப்படி தாங்கியது ?

ஏன் எல்லோரும் கிறித்துவர் ஆகிவிடவில்லை ? அல்லது இந்து மதம் ஏன் அழிந்துவிடவில்லை ?

3. கடந்த 10 ஆண்டுகளில், தமிழ் நாட்டில் எத்துனை தமிழ் இந்துக்கள் இன்னபிற மத்ததவரால் கொல்லப் படடு அல்லது தாக்கப் பட்டு இருக்கிறார்கள். இதனால் எத்துனை கேஸ்கள் கோர்ட்டில் இருக்கின்றன.

அதேசமையம் எத்துனை விவாகறத்து [இந்து ஆண் vs இந்து பெண்] கேஸ்கள் கோர்ட்டில் நடக்கின்றன ? கோர்ட்டில் தங்கிஇருக்கின்றன ?


யாருமே மத வெறியால் தாக்கப்பட / கொல்லப்படவில்லை என்று வாதிக்க வரவில்லை. இரண்டு பட்டியல்களையும் இடுங்கள் என்றே கூறுகிறேன்

இஸ்லாம் 1000 வருடம் முன்பு இங்கே வந்தது ... 100 வருடம் முன்பு இதை செய்தது, துருக்கியல் இது நடந்தது, 20 வருடம் முன்பு கிறித்துவம் அதை செய்தது என்று சொல்லி சொல்லி சாகும் வேளையில், நம் வீட்டில், அதாவது இந்துக்களில் வீட்டில், நித்தம் நித்தம் என்ன நடக்கிறது என்று சற்றே சிந்திக்கவும்

இன்று இந்து குழந்தைகளை விட இந்து முதியோரே அனாதைகளாய் நிற்கின்றனர்

முதியோர் இல்லங்கள் நிறம்பி வழிகின்றன

மருமகள் விரட்டிவிட்டாள் என்று தெருவில் நிற்போர் ...

அனாதைகளான அருமை பெற்ரோர்,

அனாதைகளாய் போன நேற்றைய இந்தியா....

இவர்களில் இந்துக்களே அதிகம் (family courtக்கு ஒரு முறை விஜயம் செய்யுங்கள் )

சிந்திப்பீர்...செயல் படுவீர்

நான் எந்த மதத்துக்கு சப்பை கட்டு கட்ட வரவில்லை. எனக்கு தென்படும் உண்மை நிலையை எழுதுகிறேன்

நான் ஒரு இந்து, அதனால் தான் இதை எழுதுகிறேன்

ஞாயமான, ஆபாசமற்ற வாத்தை எதிர் நோக்கி நிற்கிறேன்

நண்பன்
விநாயக்