Friday, February 16, 2007

சிவ தரிசனம்: பாகம் 1

மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத பரம்பொருளை காலங்களின், கவிதைகளின், கலைகளின், உணர்வுகளின் ஊடாகக் கண்டு அனுபவித்திருக்கின்றனர், தரிசித்திருக்கின்றனர் ஆன்றோர்கள். இந்த சிவராத்திரி புனித நாளில என் சிந்தையின் நினைவில் தோன்றும் சிவானுபவத் தேன் துளிகளை இங்கே பதிகிறேன், இறைவனே "அம்மா" என்றழைத்த பெருமைக்குரிய தமிழ் மூதாட்டியின் தாள் பணிந்து.



அர்த்தநாரீஸ்வரர்


காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவித்தழிய வெந்தீ அம்பெய்தான்
சரணாரவிந்தங்கள் சார்ந்து.

(கோல அரணார் : அழகிய முப்புரங்கள், வெந்தீ - வெம்மையான தீ)

- காரைக் காலம்மையார், அற்புதத் திருவந்தாதி


பகலின் ஒளி இரவின் இருளில் அமிழ்கிறது.
ஆகாயத்தில் கலந்து கரைந்துவிட பூமி விரிகிறது.
வெறுமையான இருளில் கிரகணம்
ராகுவை அன்று முளைத்த வெண்ணிலா விழுங்குகிறது
உணர்ந்த உயிர் ஒளிர்கிறது. இதுவே என் சிவ பூஜை.


-
லல்லேஸ்வரி (காஷ்மீர சைவ யோகினி மரபின் அன்னை)

சொல்லும் பொருளுமாய் இணைந்த
உலகின் அம்மையப்பரை
பார்வதி பரமேசுவரரை
வணங்குகிறேன்.
என் சொல்லும், பொருளும் இணைவதாக !


- மகாகவி காளிதாசன் (ரகுவம்சம் முதல் பாடல்)

பூவெப்போ மலரும்
பொழுதெப்போ விடியும்
சிவனெப்போ வருவான்
வரமெப்போ தருவான்

- செவிவழிப் பாடல்

நான் சொல்வதைக் கேள் இல்லைக் கேட்காமல் போ,
உன்னைப் பாடாமல் எனக்கு ஓய்தல் இல்லை.

என்னை ஏற்றுக் கொள் இல்லை ஏற்றுக் கொள்ளாது போ
உன்னைப் போற்றாமல் எனக்கு ஓய்தல் இல்லை.

என்னை நேசி இல்லை நேசிக்காமல் போ
உன்னை அணைத்துக் கொள்ளாமல் எனக்கு ஓய்தல் இல்லை

என்னைப் பார் இல்லை பார்க்காது போ
எல்லை மீறும் ஆதுரத்துடன் உனக்காக ஏங்காமல் எனக்கு ஓய்தல் இல்லை

ஓ சிவனே
வெண் மல்லிகை போன்று அழகனே
சென்ன மல்லிகார்ஜுனா
உன்னை நினைக்கும் ஆனந்தப் பரவசத்தில் தான்
என் களியாட்டம் எல்லாம்.

-
அக்கா மகாதேவி, கன்னட வீரசைவ யோகினி

கோரமற்றவர்களாகவும், கோரமுள்ளவர்களாகவும், கோரத்தினும் கோரமானவர்களாகவும், எல்லாமாகவும், எல்லாத் தீமைகளையும் பொசுக்குபர்களாகவும் திகழும் ருத்திரனின் ரூபங்களுக்கு வணக்கம்.

எந்த ருத்திரன் நெருப்பிலும், நீரிலும், செடிகொடிகளிலும் உறைகிறானோ
எந்த ருத்திரன் உலகம் அனைத்தையும் ஊடுருவி நிற்கிறானோ
அந்த ருத்திரனுக்கே நம் வணக்கங்கள்.

- யஜுர்வேதம் (ஸ்ரீருத்ரம், சிவ மந்திரங்கள்)





ஷிவ்ஜி கி பாராத் - பூதகணங்களுடன் சிவனின் திருமண ஊர்வலம் (பீகார் மதுபனி பாணி கிராம ஓவியம்)


வானவன் காண், வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும், தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண், ஐயைந்தும் ஆடினான் காண்
அத்தன் காண் கையில் அனல் ஏந்தி ஆடும்
கானவன் காண், கானவனுக்கு அருள் செய்தான் காண்
கருதுவார் இதய்த்தே கமலத்து ஊறும்
தேனவன் காண், சென்றடையாச் செல்வன் தான் காண்
சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் காணே

(கானவன் - காட்டுவாசி, ஐயைந்தும் - கொடுகொட்டி முதலான 25 வகை நடனங்கள்)

- திருநாவுக்கரசர்
தேவாரம்

அவருடைய திருப்பெயரின் இரண்டு அட்சரங்களை (சிவ) அறியாமல் மனதால் உச்சரிப்பதும் கூட மனிதர்களை சகல பாவங்களில் இருந்தும் விடுவிக்கிறது. புனிதமான புகழும், அழியா அரசும் உடைய மங்கலத்தினும் மங்கல வடிவினரான (சிவம் சிவேதர:) சிவனிடத்திலா நீர் பகைமை கொள்வது?

-
ஸ்ரீமத்பாகவதம், 4.4.14, (தாட்சாயணி தட்சனிடம் கூறியது)

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

- திருமூலர், திருமந்திரம்

கண்டம் கரியதாம் கண்மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல அழகியதாம் - தொண்டர்
உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு.

(கண்டம்; கழுத்து, ஒற்றி: சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூர்)
- பட்டினத்தார்





ஹரப்பா ஹரன்


ராஜயோகம் என்னும் உயர்நிலையைச் சென்ற்டையும் படிகளாக உடலை வலிய வசமாக்கும் ஹடயோகம் என்னும் உயர்ந்த வித்தையை உலகிற்கு உபதேசித்த ஆதிநாதனாகிய சிவனுக்கே நம் வணக்கங்கள் உரித்தாகுக!

- ஹட யோக ப்ரதீபிகா

ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளை மனத்திசைத்துக் கொள்வாய்
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்

- மகாகவி பாரதி

சிவராத்திரி அடுத்த கால பூஜை,
திருவருளால் தொடரும்...

9 comments:

கால்கரி சிவா said...

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Anonymous said...

ஜடாயு

அரவிந்தனுக்கும் உங்களுக்கும் ஏதாவது சிவராத்திரி போட்டியா, இப்படி வெளுத்து வாங்குகிறீர்களே, பதிவில் ஏராளமான விஷயங்களை உங்கள் பாணியில் அழகு தமிழில் சொல்லியுள்ளீர்கள். நன்றி. சிவதாண்டவம் தொடரட்டும்

அன்புடன்
ச.திருமலை

அரவிந்தன் நீலகண்டன் said...

எப்படி இந்த பதிவை மிஸ் செய்தேன் ஐயா!
அருமை. பாரதம் முழுவதும் பரவியிருக்கும் கலாச்சார ஒருமையை ஆன்மநேய ஒற்றுமையை வெளிப்படுத்திய உங்களுக்கு ஒரு பெரிய நன்றியும் வணக்கமும்.

Anonymous said...

ஜடாயு, நல்ல தொகுப்பு.

// உன்னை நினைக்கும் ஆனந்தப் பரவசத்தில் தான்
என் களியாட்டம் எல்லாம். //

அக்கா மகாதேவியின் இந்தக் கவிதை வரிகள் அருமை. மொழிபெயர்ப்பு உங்களுடையது தானே?

பாகம் 1 என்று போட்டு அடுத்த பாகம் வரவில்லையே??

ஜடாயு said...

நன்றி நண்பர்களே.

// மொழிபெயர்ப்பு உங்களுடையது தானே? //

ஆமாம் கங்காதரன், மூலம் தமிழில் உள்ளதைத் தவிர ஏனைய எல்லா மொழிபெயர்ப்புகளும் நான் செய்தது தான்.

// பாகம் 1 என்று போட்டு அடுத்த பாகம் வரவில்லையே?? //

சிவராத்திரி அன்று பயணம் செய்ய வேண்டி வந்தது. அதனால் அடுத்த பாகங்கள் வரவில்லை.

நேரம் கிடைக்கும்போது அவற்றைப் போடுகிறேன்.

குமரன் (Kumaran) said...

சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால் அவனருளாலே அவன் தாள் வணங்கினேன்.

ஜடாயு ஐயா, விதம்விதமான வண்ணங்களில் எங்கள் பிரானைப் போற்றிப் பாடியிருக்கிறீர்கள். அம்மை லல்லேஸ்வரியைப் பற்றி இன்றே அறிந்தேன். நன்றி.

ஜடாயு said...

// ஜடாயு ஐயா, விதம்விதமான வண்ணங்களில் எங்கள் பிரானைப் போற்றிப் பாடியிருக்கிறீர்கள்.//

நன்றி குமரன். நம் இந்து ஆன்மிக மரபு இறைவனை எல்லா வண்ணங்களிலும் காணவும், எல்லா வண்ணங்களிலும் இறைவனையே காணவும் கற்றுக் கொடுத்திருக்கிறது!

"செய்யாய் வெளியாய்.. " என்றும்
"நிறங்கள் ஓர் ஐந்துடையாய்.." என்றும்
மணிவாசகர் பாடினார் அல்லவா?

// அம்மை லல்லேஸ்வரியைப் பற்ற இன்றே அறிந்தேன். நன்றி. //

மிக உன்னதமான சிவயோகினி அவர். அற்புதமான கவிஞரும் கூட. அவரைப் பற்றி மேலும் படித்து அறியுங்கள்

வெ.சா said...

இதை நான் இப்போது தான் பார்க்கிறேன், அதுவும் தற்செயலாக. இப்படி எத்தனையோ விஷயங்களை தவற விட்டிருக்கிறேன். ஆனால் மிகவும் வருந்தவேண்டிய விஷயம், இதுவும் சரி, நீங்கள் ஹரிகிருஷ்ணன், அரவிந்தன் இத்யாதி எல்லோரும் இப்படி ப்ளாக்குகளில் சிறைப்ப்ட்டிருப்பது ஏதோ உங்கள் வீட்டுப் பிறைகளில் நீங்கள் உட்கார்ந்து கொள்வது போல் இருக்கிறது. இங்கு வந்தால் தானே உங்களைப் பிடிக்கமுடியும்? இவையெல்லாம் அச்சு சாதனங்களில் வந்தால் தானே ஐயா உலகம் அறியும்? -வெ.சா.

dbala said...

மிக அருமையான விளக்கம்

காஞ்சிபுரத்தில் திருமால் லிங்க வடிவம் பெற்ற தலம்

click to have:-

http://www.dinamalar.com/koil/269_thirukachimetrileeswarar_pillayarpalayam.ASP