Tuesday, February 06, 2007

காவிரீ...! : கவிதை

நெடுங்காலம் எதிர்பார்த்திருந்த காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்து விட்டது. இதற்கு முந்தைய ஒரு இடைக்காலத் தீர்ப்பு வந்த நேரத்தில், அக்டோடர்-1, 2002 திண்ணை இதழில் நான் எழுதி வெளிவந்தது "காவிரீ!" என்ற இந்தக் கவிதை.

இந்தத் தருணத்தில், இந்தக் கவிதையின் விழைவுகள் உண்மையாக வேண்டும் என்ற ஆவலோடு, இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

காகம் முனிவரின் கமண்டலம் கவிழ்க்க
காட்டாற்று வெள்ளமாய் வந்தவள் நீ எனக்
கதையுண்டு.

காங்கிரஸ் அரசுகள் பல கவிழ்ந்தும்
கழக அரசுகள் பல கழிந்தும்
கழனிகளில் தமிழ் உழவர் முகங்கள்
கவலையில் கவிந்தும்
ஆணையத்தின் அறைகூவல்கள்
அரசுகளின் வன்செவியில் விழுந்தும்
நீதி மன்றங்கள் எம்
நிலை கண்டு நெகிழ்ந்தும்
காலத்தில் சரியளவு
கனமழை பொழிந்தும்
ஒவ்வோர் ஆண்டும் கர்நாடகம் தாண்டி நீ
கால் பாவ முடியவில்லை!

அலைகடல் நாயகனைத் தேடி
ஆசையுடன் பாய்ந்து வரும் உன்னை
அணை போட்டுத் தடுக்கின்றார்
அருகிருக்கும் மாநிலத்தார்.
அரசியல் குறுக்கீடோ ?
அளவுக்கு அதிகமாய்ப் பயிர் செய்ய
ஆசையோ ?
ஆற்றின் மேல் எமக்குத் தான்
அதிகாரம் எனும் நினைப்போ ?
அண்டை வீட்டாருடன் சண்டையிட
ஆவலோ ?
புரியவில்லை.

பொங்கிப் பெருகிப் புரண்டோடும்
பேராற்றை
சொங்கிச் சிறு மனங்கள்
சிறைப்படுத்துவதோ ?
'ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் ' என
ஊர்க்குளத்துத் தண்ணீரை
உலகம் முழுமைக்கும் சொந்தமாக்கிய
வள்ளுவன் வாய்மொழி
வையகம் மறப்பதோ ?

நீருக்குப் போரிடும் சாக்கில்
நெடுங்கால பந்தத்தை
நெருப்பிட்டுக் கொளுத்துவதோ ?
நாடுகள் பல கூடி நைல் நதி நீரை
நயமாய்ப் பங்கிடும்
நன்னடத்தை கண்டும்
நம் நடத்தை மாறாதிருப்பதோ ?

கன்னடரே, தமிழரே!
கண்மூடித்தனம் ஒழிப்போம்.
அமைதியாய்ச் சிந்தித்து
அறிவார்ந்த முடிவெடுப்போம்.
'இருதரப்பும் வெற்றி! ' என்று
இறுமாப்புடன் உரைப்போம்.
நெல்மணியும் கரும்பும் நிறையும்
காவிரியின் கரைகளில்
நல்லுறவும் நட்பும்
செழித்தோங்கி வளரச் செய்வோம்.

3 comments:

Hari said...


நாடுகள் பல கூடி நைல் நதி நீரை
நயமாய்ப் பங்கிடும்
நன்னடத்தை கண்டும்
நம் நடத்தை மாறாதிருப்பதோ ?


நம் நடத்தைகள் பங்கிடும் நோக்கல்ல
பகை தீயிடும் பாங் காதலால்
காவிரி இன்றல்ல என்று வருவாள்
என்று அவளே அறியால்

கங்காதரன் said...

நல்ல கவிதை ஜடாயு.

// 'இருதரப்பும் வெற்றி! ' என்று
இறுமாப்புடன் உரைப்போம். //


win-win சிச்சுவேஷன் என்பது காவிரி பிரசினையில் சாத்தியமே இல்லை. கவிதைக்கு நன்றாக இருக்கலாம். ஆனால் கசப்பான உண்மை இது.

இப்போதைய தீர்ப்பிலேயே கர்நாடகத்துக்கு சாதகாமாக நிறைய விஷயம் உள்ளது. அது அமுக்கப் படுகிறது..

கோபால் said...

நல்ல கவிதை.

// நீருக்குப் போரிடும் சாக்கில்
நெடுங்கால பந்தத்தை
நெருப்பிட்டுக் கொளுத்துவதோ ? //

இது சோகமான விஷயம். கர்நாடகத்தில் காவிரி அரசியல் = தமிழர் எதிர்ப்பு என்பது மிகவும் உறுதியாக இருந்தது. இப்போது ஓரளவு குறைந்து வருகிறது.